Tuesday, 29 April 2014

ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோப்ஹாம் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு கிளம்பியது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் இது ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனமாகும்.


இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எனினும், விமான ஓட்டியின் திறமையால் எந்த விதமான சேதமும் இன்றி விமானம் உடனடியாக பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. 

எரிபொருள் தீப்பிடித்து எஞ்சின் ஒன்று எரியத் தொடங்கியதும் பயணிகளிடத்தில் பதற்றம் தோன்றியது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருக்க விமானி திறமையாக விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே திரும்பவும் தரையிறக்கினார் என்று இந்த விமானத்தில் பயணம் செய்த ஜேசன் கிரிமெட் என்பவர் தெரிவித்தார். 

என்ஜினில் பற்றிய தீ விமானியால் அணைக்கப்பட்டு பரவாமல் தடுக்கப்பட்டது என்றும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் தீயணைப்பு சேவை அந்த விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தது என்றும் விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

மேலெழுந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து தீப்பிழம்புகள் தென்பட்டதும் மோசமான விபத்தாக இருக்கும் என்று தான் அஞ்சியதாக உள்ளூர் வானொலி நிலையத்திற்குத் தகவல் கொடுத்த சாட்சி ஒருவரும் குறிப்பிட்டார்.

Monday, 21 April 2014

தென்னாப்பிரிக்காவின் உயரிய கவுரவத்துக்கு 5 இந்தியர்கள் தேர்வு

தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று வீரதீர செயல்களையும், பெரும் தியாகத்தையும் புரிந்தமைக்காக தென்னாப்பிரிக்க இந்தியர்கள் 5 பேருக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான ‘தி ஆர்டர் ஆஃப் மெண்டி ஃபார் பிரேவரி’, ‘தி ஆர்டர் ஆஃப் லுத்துலி’ மற்றும் ‘தி ஆர்டர் ஆஃப் மபுங்குப்வே’ ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது.


இந்த விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொத்தம் 54 பேரில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியை சேர்ந்த இந்த ஐவரும் இடம்பெற்றுள்ளனர்.

அநீதியான அடக்குமுறைகளை மக்களின் மீது திணித்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடி, சுதந்திர தென்னாப்பிரிக்கா அமைய உழைத்த இந்த்ரெஸ் நாயுடு, ஷிரிஷ் நானாபாய், ரெக்கி வாண்டையார் ஆகியோருக்கு ‘தி ஆர்டர் ஆஃப் மெண்டி ஃபார் பிரேவரி’ விருதுகள் வழங்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் தேசிய கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்காக உழைத்த அப்துல்ஹே ஜசாத்துக்கு ‘தி ஆர்டர் ஃபார் லுத்துலி’ விருதும், மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியையாக இருந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை புரிந்த பிரிடோரியா தாவரவியல் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான நம்ரீதா லால் என்ற பெண்ணுக்கு ‘தி ஆர்டர் ஆஃப் மபுங்குப்வே’ விருதும் வழங்கப்படுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டோரியாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த விருதுகளை இவர்களுக்கு வழங்கி தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா வாழ்த்துரை ஆற்றுகிறார்.

சர்வாதிகாரத்தை எதிர்த்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்கு துணை நின்றமைக்காக மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘காந்தி’ என்ற ஆங்கில திரைப்படமாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் ‘லார்ட்’ ரிச்சர்ட் அட்டன்பரோ, அமெரிக்க திரையுலகை சேர்ந்த டேன்னி க்லோவர் மற்றும் குவின்சி ஜோன்ஸ் ஆகியோருக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது.

Wednesday, 16 April 2014

சனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு

சனி கிரகத்தில் இருந்து புதிய துணை கிரகம் உருவானது குறித்து நாசா ஆய்வு மேற்கொண்டுள்ளது.


சூரிய குடும்பத்தில் சனி பெரிய கிரகமாகும். இதற்கு 61 துணை கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதில் மிகச்சிறிய ஒரு துணை கிரகம் சனி கிரகத்தின் சிறப்பு அம்சமான பிரகாசமான வளையத்துடன் உள்ளது. அது ‘ஐஸ்’ கட்டி போன்று ‘பள பள’ வென இருக்கிறது.

அந்த துணை கிரகம் 1200 கி.மீட்டர் நீளமும், 10 கி.மீட்டர் அகலத்துடனும் காணப்படுகிறது. அதுபோன்ற ஒரு துணை கிரகத்தை சனி கிரகத்தில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் களிமுர்ரே தெரிவித்துள்ளார்.

இந்த துணை கிரகத்துக்கு ‘பொக்கி’ என பெயரிட்டுள்ளனர். புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பின் மூலம் பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உருவாகி சூரியனிடம் இருந்து இடம் பெயர்ந்தது எப்படி என்ற அறிய முடியும் என்றும், அது குறித்தும் ஆராய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்