Tuesday, 29 April 2014

ஆஸ்திரேலிய விமானத்தில் தீ: பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கோப்ஹாம் நிறுவனத்தின் ஜெட் பயணிகள் விமானம் ஒன்று இன்று காலை 93 பயணிகளுடன் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பரோ தீவுகளுக்கு கிளம்பியது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பிராந்தியத்தில் செயல்பட்டு வரும் இது ஒரு தனியார் ஒப்பந்த நிறுவனமாகும்.


இந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் எஞ்சின் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. எனினும், விமான ஓட்டியின் திறமையால் எந்த விதமான சேதமும் இன்றி விமானம் உடனடியாக பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. 

எரிபொருள் தீப்பிடித்து எஞ்சின் ஒன்று எரியத் தொடங்கியதும் பயணிகளிடத்தில் பதற்றம் தோன்றியது. ஆனால் பெரும்பான்மையானவர்கள் அமைதியாக இருக்க விமானி திறமையாக விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே திரும்பவும் தரையிறக்கினார் என்று இந்த விமானத்தில் பயணம் செய்த ஜேசன் கிரிமெட் என்பவர் தெரிவித்தார். 

என்ஜினில் பற்றிய தீ விமானியால் அணைக்கப்பட்டு பரவாமல் தடுக்கப்பட்டது என்றும், விமானம் பத்திரமாகத் தரையிறங்கியதும் தீயணைப்பு சேவை அந்த விமானத்திற்கு பாதுகாப்பு அளித்தது என்றும் விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

மேலெழுந்துகொண்டிருந்த விமானத்திலிருந்து தீப்பிழம்புகள் தென்பட்டதும் மோசமான விபத்தாக இருக்கும் என்று தான் அஞ்சியதாக உள்ளூர் வானொலி நிலையத்திற்குத் தகவல் கொடுத்த சாட்சி ஒருவரும் குறிப்பிட்டார்.

Monday, 21 April 2014

தென்னாப்பிரிக்காவின் உயரிய கவுரவத்துக்கு 5 இந்தியர்கள் தேர்வு

தென்னாப்பிரிக்காவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று வீரதீர செயல்களையும், பெரும் தியாகத்தையும் புரிந்தமைக்காக தென்னாப்பிரிக்க இந்தியர்கள் 5 பேருக்கு அந்நாட்டின் மிக உயர்ந்த கவுரவமான ‘தி ஆர்டர் ஆஃப் மெண்டி ஃபார் பிரேவரி’, ‘தி ஆர்டர் ஆஃப் லுத்துலி’ மற்றும் ‘தி ஆர்டர் ஆஃப் மபுங்குப்வே’ ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது.


இந்த விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மொத்தம் 54 பேரில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவழியை சேர்ந்த இந்த ஐவரும் இடம்பெற்றுள்ளனர்.

அநீதியான அடக்குமுறைகளை மக்களின் மீது திணித்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடி, சுதந்திர தென்னாப்பிரிக்கா அமைய உழைத்த இந்த்ரெஸ் நாயுடு, ஷிரிஷ் நானாபாய், ரெக்கி வாண்டையார் ஆகியோருக்கு ‘தி ஆர்டர் ஆஃப் மெண்டி ஃபார் பிரேவரி’ விருதுகள் வழங்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் தேசிய கட்டமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்காக உழைத்த அப்துல்ஹே ஜசாத்துக்கு ‘தி ஆர்டர் ஃபார் லுத்துலி’ விருதும், மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியையாக இருந்து நாட்டு மக்களுக்கு பல்வேறு நன்மைகளை புரிந்த பிரிடோரியா தாவரவியல் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரான நம்ரீதா லால் என்ற பெண்ணுக்கு ‘தி ஆர்டர் ஆஃப் மபுங்குப்வே’ விருதும் வழங்கப்படுகிறது.

வரும் ஞாயிற்றுக்கிழமை பிரிட்டோரியாவில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் இந்த விருதுகளை இவர்களுக்கு வழங்கி தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா வாழ்த்துரை ஆற்றுகிறார்.

சர்வாதிகாரத்தை எதிர்த்து நடைபெற்ற தென்னாப்பிரிக்க மக்களின் போராட்டத்துக்கு துணை நின்றமைக்காக மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை ‘காந்தி’ என்ற ஆங்கில திரைப்படமாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த இயக்குனர் ‘லார்ட்’ ரிச்சர்ட் அட்டன்பரோ, அமெரிக்க திரையுலகை சேர்ந்த டேன்னி க்லோவர் மற்றும் குவின்சி ஜோன்ஸ் ஆகியோருக்கும் இவ்விழாவில் விருதுகள் வழங்கப்படுகிறது.

Wednesday, 16 April 2014

சனி கிரகத்தில் புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பு

சனி கிரகத்தில் இருந்து புதிய துணை கிரகம் உருவானது குறித்து நாசா ஆய்வு மேற்கொண்டுள்ளது.


சூரிய குடும்பத்தில் சனி பெரிய கிரகமாகும். இதற்கு 61 துணை கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது புதிதாக ஒரு துணை கிரகம் உருவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் அனுப்பிய காசினி விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. அதில் மிகச்சிறிய ஒரு துணை கிரகம் சனி கிரகத்தின் சிறப்பு அம்சமான பிரகாசமான வளையத்துடன் உள்ளது. அது ‘ஐஸ்’ கட்டி போன்று ‘பள பள’ வென இருக்கிறது.

அந்த துணை கிரகம் 1200 கி.மீட்டர் நீளமும், 10 கி.மீட்டர் அகலத்துடனும் காணப்படுகிறது. அதுபோன்ற ஒரு துணை கிரகத்தை சனி கிரகத்தில் இதற்கு முன்பு பார்த்ததில்லை என லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக பேராசிரியர் களிமுர்ரே தெரிவித்துள்ளார்.

இந்த துணை கிரகத்துக்கு ‘பொக்கி’ என பெயரிட்டுள்ளனர். புதிய துணை கிரகம் கண்டுபிடிப்பின் மூலம் பூமி உள்ளிட்ட அனைத்து கிரகங்களும் உருவாகி சூரியனிடம் இருந்து இடம் பெயர்ந்தது எப்படி என்ற அறிய முடியும் என்றும், அது குறித்தும் ஆராய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்

Tuesday, 25 March 2014

மூழ்கிய மலேசிய விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டுபிடிக்க அமெரிக்க வீரர்கள் வருகிறார்கள்

இந்திய கடலில் விழுந்து மூழ்கிய மலேசிய விமானத்தை கண்டு பிடித்து மீட்க முடியுமா? என்ற கருத்து நிலவுகிறது.


மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் நகருக்கு கடந்த 8–ந்தேதி 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அது புறப்பட்ட 2 மணி நேரத்தில் தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது, நடுவானில் மாயமானது. விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பு துண்டிக்கப்பட்டது. மாயமான விமானத்தை இந்தியா, அமெரிக்கா உள்பட 26 நாடுகள் தீவிரமாக தேடி வந்தன. போர்க் கப்பல்கள் மற்றும் விமானங்கள் அதை தேடி வந்தன.

ஆனால் அது குறித்து தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் மற்றும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அளித்த தகவலின் பேரில் 17 நாட்களுக்கு பிறகு அந்த விமானம் குறித்த தகவல் உறுதி செய்யப்பட்டது.
அதன்படி தெற்கு இந்திய பெருங்கடலில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து சுமார் 2500 கி.மீட்டர் தூரத்தில் அந்த விமானம் கடலுக்குள் நொறுங்கி விழுந்ததாக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இதன்மூலம் மாயமான மலேசிய விமானம் குறித்த தகவல் 17 நாட்களுக்கு பிறகு ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது உடைந்து விழுந்து நொறுங்கிய விமானம் கடலுக்குள் 20 ஆயிரம் அடி ஆழத்தில் கிடப்பது தெரியவந்தது. கடலுக்குள் விழுந்த விமானத்தில் இருந்து தொடர்ந்து சமிக்ஞைகள் (சிக்னல்) வந்து கொண்டிருப்பதாக இங்கிலாந்தின் இன்மர்சாட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் அதன் தகவல் தொடர்பு கருவிகளில் ஒன்று செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
கடலில் மூழ்கி கிடக்கும் விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஏனெனில் அதற்கான தொழில்நுட்பத்துடன் கூடிய கருவி அமெரிக்காவிடம் தான் உள்ளது.

அந்த கருவியின் உதவியால் விமானத்தின் உடைந்த பாகங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என ‘பென்டகன்’ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடைந்த பாகங்கள் இருக்கும் இடம் தெரியும் பட்சத்தில் அதில் இருந்து வெளிவரும் சமிக்ஞைகள் (சிக்னல்) உதவியுடன் கருப்பு பெட்டியை மீட்க முடியும் என்று அமெரிக்காவின் 7–வது கப்பல்படை அதிகாரி கிறிஸ்புட்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இப்பணியில் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் பயன்படுத்த உள்ளனர். கருப்பு பெட்டியின் பேட்டாரி தற்போது செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Monday, 24 March 2014

உலக சதுரங்க தகுதி சுற்று: ஆனந்த் அபாரம்

2014-ம் ஆண்டுக்கான உலக சதுரங்க (செஸ்) சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்செனுடன் மோதப்போகும் வீரரை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று போட்டி (கேன்டிடேட்ஸ் சதுரங்க தொடர்) ரஷியாவின் கந்தி மான்சிஸ்க் நகரில் நடந்து வருகிறது.


இந்திய கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட 8 முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் ஒவ்வொருவரும் மற்ற வீரர்களுடன் தலா இரு முறை மோத வேண்டும். 14 சுற்று முடிவில் முதலிடத்தை பிடிக்கும் வீரர் கார்ல்செனுடன் மோதும் வாய்ப்பை பெறுவார்.

இந்த நிலையில் நேற்று 9-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த், பல்கேரியாவின் வெஸ்லின் தபலோவை எதிர்கொண்டார். வெள்ளை நிற காயுடன் ஆடிய ஆனந்த் 57-வது நகர்த்தலில் தபலோவின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்து வெற்றிக்கனியை பறித்தார்.

இதுவரை தோல்வியே சந்திக்காத ஆனந்த்துக்கு இது 3-வது வெற்றியாகும். மற்றொரு ஆட்டத்தில் அர்மேனியா வீரர் லெவோன் ஆரோனியனுக்கு, ஷக்ரியர் நேம்ட்யாரோவ் (அஜர்பைஜான்) அதிர்ச்சி அளித்தார். 9 சுற்று முடிவில் ஆனந்த் 6 புள்ளியுடன் மீண்டும் தனி முன்னிலை பெற்றுள்ளார். ஆரோனியன் 5 புள்ளியுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

Friday, 21 March 2014

மலேசிய விமானத்தின் பாகத்தை தேடிச் சென்ற ஆஸ்திரேலியாவிற்கு ஏமாற்றம்


239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்புரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்க்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8–ந் தேதி திடீரென மாயமானது தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்த போது விமான கட்டுப்பாட்டு அறையுடன் ஆன தொடர்பை இழந்தது. அதையடுத்து 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது வியட்நாம் அருகே புகுவாக் தீவு அருகே கடலில் விழுந்து மூழ்கி விட்டதாக தகவல் வெளியாகின.


எனவே அந்த விமானத்தை தேடும் பணியில் 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. விமானம் மாயமாகி 2 வாரங்களாகயும் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்கவில்லை.எனவே, விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் குடும்பத்தினர் தீராத கவலை மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே மாயமான விமானத்தின் பாகங்கள் என கருதப்படும் 2 பொருட்கள் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 2 ஆயிரத்து 500 கி.மீட்டர் தொலைவில் அவை கடலில் மிதப்பதை செயற்கைக் கோள் படம் காட்டிக் கொடுத்தது.

24 மீட்டர் (78 அடி) நீளம் கொண்ட அந்தப் பொருள் பல்லாயிரம் மீட்டர் ஆழத்திலிருந்து தண்ணீரில் மேலே அடித்து வரபட்டதாக கருதப்பட்டது.எனவே, இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் மாயமான விமானத்தின் சிதைவுகளை கண்டறிய ஆஸ்திரேலியாவின் 5 கப்பல்கள் விரைந்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் செயற்கைக் கோள் படத்தில் தெரிவது விமானத்தின் உடைந்த பாகமா? என்பதை உறுதி செய்ய ஆய்வும் தீவிரமாக நடைபெற்று வந்தது. ஆனால், இந்த ஆய்வில் பலன் ஏதும் கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக, இன்று பேட்டியளித்த ஆஸ்திரேலிய துணை பிரதமர் வாரன் டிரஸ், ‘அப்பகுதியில் மிதந்து கொண்டிருந்த ஏதோ ஒன்று இப்போது அங்கு மிதக்கவில்லை. அது கடலின் அடியில் மூழ்கி மறைந்திருக்கலாம்’ என்று தெரிவித்தார்.

Thursday, 20 March 2014

மலேசிய விமானத்தின் துண்டுகள் கண்டுபிடிப்பு?: ஆஸி. தகவல்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசிய விமானம் ஒன்று கடந்த 8-ம் தேதி புறப்பட்டது. பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் ரேடாரிலிருந்து மறைந்துபோனது. பல நாடுகளும் மாயமான இந்த விமானம் குறித்த தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளபோதும் நேற்றுவரை எந்தவிதமான தகவல்களும் கிடைக்கவில்லை.


இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் செயற்கைக்கோள் ஒன்றில் இந்தியப் பெருங்கடலில் இரண்டு துண்டுகள் மிதப்பது போன்ற காட்சி தென்பட்டுள்ளது. இதனால் அவை மலேசிய விமானத்தின் துண்டுகளாக இருக்கலாம் என்ற ஐயத்தினை உறுதி செய்துகொள்ள விமானம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் டோனி அப்போட் இன்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியக் கடல் பாதுகாப்பு ஆணையத்திற்கு (ஏஎம்எஸ்ஏ) கிடைத்துள்ள தகவலின்படி தெற்கு இந்தியப் பெருங்கடலில் மிதக்கும் இரண்டு பொருட்கள் காணாமற்போன விமானத்தின் பாகங்களாக இருக்கக்கூடும் என்ற ஐயத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கிடமும் பேசியதாகத் தெரிவித்த அவர் இந்தத் துண்டுகள் பற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். இந்தப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் பணி கடுமையானதாக இருக்கும். இறுதியில் அவை விமானத்தைச் சேர்ந்தவையாக இல்லாமலும் இருக்கலாம் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் கூறினார்.

முன்னதாக அனுப்பப்பட்ட விமானத்தைத் தொடர்ந்து இன்னும் மூன்று விமானங்களும் இந்தப் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தத் தகவல் பற்றிய செய்தியாளர் கூட்டமொன்றும் கான்பெர்ராவில் நடத்தப்படும் என்று ஏஎம்எஸ்ஏ தெரிவித்துள்ளது.

லாவோசிலிருந்து காஸ்பியன் கடல் வரையிலான வடக்குப் பகுதியிலும், மேற்கே இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளிலிருந்து ஆஸ்திரேலியா வரையிலான தெற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியிலுமான இரு பிரிவுகளாக இந்தத் தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் தென்பகுதியில் ஆஸ்திரேலியா அமெரிக்க கப்பற்படையின் துணையுடன் முன்னணியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.