Friday, 8 November 2013

இலங்கை சிறையில் உள்ள 86 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

பாக் ஜல சந்தியில் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதிக்கு சென்று மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கி, பிடித்துச் செல்வது பற்றி மிகுந்த மன வேதனையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு நான் எழுதுகிறேன்.

தமிழக மீனவர்களின் இந்த வாழ்வாதார பிரச்சினைப் பற்றி நான் உங்களுக்கு பல தடவை கடிதங்கள் எழுதியுள்ள போதிலும், இலங்கை கடற்படையினர் கேள்வி கேட்பாரின்றி தமிழக மீனவர்களை தாக்கி சித்ரவதை செய்வது தொடர்கிறது. இந்திய அரசு இந்த விஷயத்தில் மவுனமாகவும், அக்கறை இல்லாத போக்குடனும் இருப்பதால்தான் இலங்கை கடற்படை இப்படி அதிகாரம் கொண்டது போல அத்துமீறி செயல்படுகிறது.

இந்த நிலையில் அதிர்ச்சி அளிக்க வைக்கும் மற்றொரு நிகழ்வாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 4–11–2013 அன்று ஐஎன்டி–டி.என்.–10 எம்எம்–333, ஐ.என்டி–டி.என்–10– எம்எம்–158, ஐஎன்டி–டிஎன்–10–எம்எம் – 104 ஆகிய 3 எந்திரப் படகுகளில் மீன் பிடிக்க சென்ற 13 மீனவர்கள் 5–11–2013 அன்று இலங்கை கடற்படையால் தாக்கி பிடித்து செல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

அதே தினத்தன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் ஐஎன் டி–டிஎன்–08 – எம்எம்–028, ஐஎன்டி–டிஎன்–08– எம் எம்–404, ஐஎன்டி– டிஎன்–08 –எம்எம்–082, ஐஎன்டி– டிஎன்–08 – எம்எம்–318 ஆகிய 4 எந்திரப் படகுகளில் சென்று மீன் பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

5–11–2013 தினத்தன்று மட்டும் இந்த 30 தமிழக மீனவர்கள் 7 படகுகளுடன் சட்ட விரோதமாக இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்பு 56 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் இப்படி சட்ட விரோதமாக பிடித்துச் செல்லப்பட்டு இலங்கையில் உள்ள ஜெயில்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அந்த ஏழை மீனவர்களின் 35 மீன்பிடி படகுகள் இன்னமும் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தமிழக மீனவர்களை துன்புறுத்தி, சித்ரவதை செய்து, அவர்களது ஏழ்மையான வாழ்வாதாரத்தையே சீர்குலைத்து வரும் இலங்கையின் இந்த நடவடிக்கை மிக, மிக கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலை இனியும் இந்திய அரசு தொடர்ந்து மவுனமாக பார்த்துக் கொண்டிருக்க கூடாது.

தாங்கள் உடனடியாக இந்த பிரச்சினையில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுபற்றி உயர்மட்ட தூதரக அளவில் கொண்டு சென்று இலங்கை சிறைகளில் உள்ள 86 தமிழக மீனவர்களையும் உடனே மீட்க வேண்டும்.

மேலும் இலங்கையின் பிடியில் உள்ள தமிழக மீனவர்களின் 42 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க வேண்டும். நீங்கள் இதில் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று மீண்டும் ஒரு தடவை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment