Wednesday, 4 December 2013

செவ்வாயை நோக்கிய பயணம்: மங்கள்யான் விண்கலம் புவிஈர்ப்பு மண்டலத்தை தாண்டியது

செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி உள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை உயர்த்தும்போது மங்கள்யானில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயங்கவில்லை என்றாலும் அதில் உள்ள எரிபொருள்கள் வீணாகாததால் ராக்கெட்டுகளை மீண்டும் இயக்கும் பணி நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.
http://www.maalaimalar.com/2013/12/04131020/Mangalyan-reach-sphere-of-infl.html


மங்கள்யான் நேற்று முன்தினம் 5,36,000 கி.மீ தூரத்தை கடந்து சந்திரனின் சுற்றுப்பாதையை தாண்டிய நிலையில் இன்று அதிகாலை 1.14 மணியளவில் 9,25,000 கி.மீ தூரத்தை கடந்து புவிஈர்ப்பு மண்டலத்தை தாண்டி சென்றதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

விண்கலம் சுற்றுப்பாதையில் இருந்து விலகினால் டிசம்பர் 11, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 14 ஆகிய நாட்களில் சரிசெய்து செப்டம்பர் 2014-ல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாராய்ச்சி வெற்றிகரமாக முடியும் போது ஏற்கனவே செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக விண்கலம் அனுப்பி வெற்றி கண்ட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும் வாய்ப்புள்ளது.

Tuesday, 3 December 2013

குமரியில் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, சுருளோடு, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

http://www.maalaimalar.com/2013/12/03123549/Kumari-storm-warning-fishermen.html

முள்ளாங்கினாவிளையில் அதிகபட்சமாக 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையோர பகுதியான பாலமோரில் பலத்த மழை பெய்ததால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 27.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 196 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.80 அடியாகவும், சிற்றார்–1 அணை நீர்மட்டம் 12.79 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 12.89 அடியாகவும், மாம்பழத் துறையாறு அணை நீர்மட்டம் 51.02 அடியாகவும் உள்ளது. நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர் மட்டம் 21 அடியாக உயர்ந்து உள்ளது. மொத்தம் 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவை.

மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டாரில் வருமாறு:–
பேச்சிப்பாறை, 12.2, பெருஞ்சாணி 2.8, சிற்றார்1–9.8, சிற்றார்2 –6.8, ஆனைக்கிடங்கு–2, குளச்சல் 4.6, முள்ளாங்கினாவிளை 15, புத்தர்அணை 2.6, நாகர்கோவில் 5.1, பூதப்பாண்டி, 8, கன்னிமார் 8.3, ஆரல்வாய்மொழி 7, பாலமோர் 8.2, மயிலாடி 1.5.

வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வுநிலை காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மீனவ துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் ‘குமரி மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என கூறி உள்ளனர்.மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Monday, 2 December 2013

தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு ஐகோர்ட்டில் விளக்கம்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கனகசபை பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மன் மோகன்சிங் அறிவிப்பு வெளியிட்டார்.
http://www.maalaimalar.com/2013/12/02132931/bharat-ratna-award-to-tendulka.html

பொதுவாக பாரத ரத்னா விருது கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வழங்கப்படும்.விளையாட்டு வீரருக்கு இதுபோன்ற விருது வழங்கப்பட்டது இல்லை. தெண்டுல்கருக்கு இந்த விருதை அறிவித்து இருப்பது விதிமுறை மீறலாகும். எனவே இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் பி.வில்சன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–இந்திய ஜனாதிபதி 16–11–2011 அன்று வெளியிட்ட அறிக்கையில், கலை, இலக்கியம், அறிவியல் மட்டுமல்லாமல் பிற துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சச்சின் தெண்டுல்கர் பாரத ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.பின்னர் இந்த வழக்கை நாளைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Friday, 29 November 2013

2015–ம் ஆண்டு சந்திரனில் துளசி செடி வளர்க்க நாசா திட்டம்

சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஈடுபட உள்ளது. அதற்கான ஆய்வை வருகிற 2015–ம் ஆண்டு தொடங்க உள்ளது.

அதற்கான ஆயத்த பணியை இப்போதே தொடங்கிவிட்டது. அதற்காக எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது.
http://www.maalaimalar.com/2013/11/29112936/Nasa-plans-grow-basil-plant-in.html

அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது.

இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதன் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.

தாவரங்களை வளர்ப்பதற்காக சந்திரனுக்கு வருகிற 2015–ம் ஆண்டில் ஒரு ஆய்வு கூடம் அனுப்பப்படுகிறது. அதில் 5 முதல் 10 நாட்களில் முளைத்து வளரக்கூடிய டக்னிப், அராபி, டோப்சிஸ், ஓமம், துளசி செடி வகைகளின் விதைகளும் எடுத்து செல்லப்படுகின்றன.

இந்த தாவரங்கள் செழித்து வளரும் பட்சத்தில் அங்கு மனிதனும் வாழ முடியும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதற்கான ஆய்வும் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னோடி ஆராய்ச்சியாக தாவரங்கள் பயிரிடப்படுகிறது.

Thursday, 28 November 2013

அரசியலமைப்பின் கடமைகளை நிறைவேற்ற காங்கிரஸ் தவறிவிட்டது: மோடி குற்றச்சாட்டு

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 1-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். சிகர் என்னுமிடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ஏழை மக்களுக்காக பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாக கூறினார்.

http://www.maalaimalar.com/2013/11/28163122/Modi-says-Congress-fails-to-fu.html


இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று அதே சிகர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது சோனியா காந்தி பற்றி அவர் பேசியதாவது:-

ஏழைகளுக்கான சட்டத்தை உருவாக்கும் சோனியா காந்தி, அதை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு சென்று நிறைவேற்றுவது கிடையாது. பாபா சாகேப் பீமா ராவ் அம்பேத்கார், ஏழை மக்களை காப்பாற்றவும், அவர்களுக்கு படிப்பறிவை கொடுக்கவும் சட்டத்தை உருவாக்கினார்.

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த அரசியலமைப்பின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றியிருக்கவில்லை. கடந்த 60 வருடங்களாக அவர்கள் நாட்டை அழித்து இருக்கிறார்கள்.

துப்பாக்கிக்கு பதில், துப்பாக்கிக்கான லைசென்சை ஒரு சிங்கத்திடம் காட்டுகிறீர்கள். இதை கண்டு அது பயப்படப் போவதில்லை. அதேபோன்று ஏழைகளுக்கான சட்டத்தை உருவாக்குவது மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்துவது மிக அவசியம்.

உச்ச நீதிமன்றத்தை கூட கண்டுகொள்ளாமல், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஏழைகளுக்கான திட்டங்களை நிறைவேற்றவில்லை. ரெயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான டன் கோதுமைகளை அவர்கள் அழிவதற்கு அனுமதிக்கிறார்கள்.

அழிந்துகொண்டிருக்கிற அந்த கோதுமைகளை ஒரு கிலோ 80 பைசா விலைக்கு ஒயின் தயாரிப்பு கம்பெனிகளுக்கு விற்றுவிடுகிறார்கள். அதை ஏழைகளுக்கு கொடுப்பதில்லை.

ராஜஸ்தானின் சிகர் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெறும் நதிகளை இணைக்கும் வாஜ்பாயின் கனவு திட்டத்தினை காங்கிரஸ் தலமையிலான அரசு நிறைவேற்றவில்லை இவ்வாறு அவர் பேசினார்.

Wednesday, 27 November 2013

டிசம்பர் 1–ந்தேதி செவ்வாய் கிரகத்துக்கு திசை திரும்புகிறது மங்கள்யான்

மங்கள்யான் விண்கலம் வருகிற 1–ந்தேதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்பப்படுகிறது.

செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் விண்கலத்தை அனுப்பி உள்ளது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
http://www.maalaimalar.com/2013/11/27135204/mangalyan-turn-to-mars-in-dece.html

பூமியைச் சுற்றி வரும் மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை உயர்த்தும்போது மங்கள்யானில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயங்கவில்லை என்றாலும் அதில் உள்ள எரிபொருள்கள் வீணாகாததால் ராக்கெட்டுகளை மீண்டும் இயக்கும் பணி நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.

தற்போது பூமியின் சுற்று வட்டப்பாதையில் 2 லட்சம் கி.மீ. தூரத்தை விண்கலம் எட்டி விட்டதால் அடுத்தகட்டமாக மங்கள்யானை செவ்வாய் கிரகம் நோக்கி திசை திரும்பும் பணி நடைபெறுகிறது. வருகிற 1–ந்தேதி இந்தப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு திசை திருப்புவது என்பது மிகவும் சிக்கலானது என்பதால் மங்கள்யானுக்கு இது முக்கிய கட்டமாகும். செவ்வாய் நோக்கி பயணத்தை திசை திருப்பும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.
ஏற்கனவே சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை அதிகரிப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டபோதும் விஞ்ஞானிகள் அதை வெற்றிகரமாக சமாளித்து விட்டனர். தற்போது டிசம்பர் 1–ந்தேதி முக்கிய கட்டம் என்பதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பதற்றத்தில் உள்ளனர்.

Tuesday, 26 November 2013

பெருநாட்டில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி

பெருநாட்டில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது.
http://www.maalaimalar.com/2013/11/26112608/55-earthquake-in-beru-country.html


தென் அமெரிக்காவின் பெருநாட்டில் நேற்று மாலை 3.06 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் லிமா மற்றும் அதை சுற்றியுள்ள 72 மைல் சுற்றளவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

இங்கு 5.5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குயில்மானா பகுதியில் பூமிக்கு அடியில் 26 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.