Thursday, 27 February 2014

2 இந்திய அமெரிக்கர்களுக்கு உலகப் புகழ்பெற்ற ஹெயின்ஸ் விருது

உலகப் புகழ்பெற்ற ஹெயின்ஸ் விருது கலை, சூற்றுச்சூழல், பொதுக் கொள்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணமும், அமெரிக்க செனட்டர் ஜான் ஹெயின்ஸ்-ன் உருவம் பொறித்த பதக்கமும் வழங்கப்படுகிறது.


அந்த வகையில் 19-வது ஹெயின்ஸ் விருது வழங்கும் விழா, வரும் ஏப்ரல் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கப்படும் ஹெயின்ஸ் விருதுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் சஞ்சீவ் அரோரா ஆகிய இருவர் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பெற்ற சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் என்பதற்காக ஸ்டான்போர்டை சேர்ந்த ஆப்ரகாம் வர்கீஸ்க்கும், வீடியோ கான்பரன்சிங் தொழில்நுட்பம் மூலம் சமூக சுகாதார மையம் அமைப்பதில் புரட்சியை ஏற்படுத்திய அல்பூகெர்க் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் அரோராவுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருது முன்னாள் அமெரிக்க செனட்டர் ஜான் ஹெயின்ஸ் நினைவாக ஹெயின்ஸ் குடும்ப அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Wednesday, 26 February 2014

உக்ரைன் பிரிவினை கருத்துக்கு அமெரிக்கா-இங்கிலாந்து மறுப்பு

உக்ரைனில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யனுகோவிச் பதவியிறக்கம் செய்யப்பட்டது பனிப்போர் காலத்திய கிழக்கு, மேற்கு பிரிவினைகளை வெளிப்படுத்தியது என்ற தகவலை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுமே நேற்று மறுத்துள்ளன.


ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் உள்ள அதிகார யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களின் வெளிப்பாடே உக்ரைனில் காணப்படும் அரசியல் நிலைமை என்பதை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியும், இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு செயலரான வில்லியம் ஹேகும் நிராகரித்தனர்.

மேலும், உக்ரைனின் மக்கள் அமைதியாக தங்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் ரஷ்யா மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து அந்நாட்டிற்கு உதவ வேண்டும் என்று இருவருமே வலியுறுத்தினர். ஜனநாயக அரசிற்கான தங்களுடைய விருப்பங்களை வெளிப்படையாகப் பேசிய உக்ரைன் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய கடமைப்பட்டுள்ளதாக ஜான் கெர்ரி கூறினார்.

இது கிழக்கு, மேற்கு நாடுகளுக்கான பூஜ்ய வட்ட விளையாட்டு அல்ல. மேலும், உக்ரைனின் தற்போதைய நிலவரம் ரஷ்யா, அமெரிக்கா போன்ற எந்த நாடுகளின் தேர்வும் அல்ல. இது முழுக்க, முழுக்க உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு நலனுக்காகச் செயல்படுவது ஆகும். இன்று முதல் அமைதியான தீர்வு கிடைக்க அனைவருமே இணைந்து பணி புரிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹேகும் இந்த கருத்துகளுக்கு ஒத்த கருத்துகளையே வெளியிட்டார். பாலியல் வன்முறை குறித்த ஒரு அரசுத்துறை கருத்தரங்கில் பேச வந்த இருவரும் முன்னாள் சோவியத் குடியரசு நாடான உக்ரைனை மேற்கத்திய அல்லது ரஷ்ய சார்பு பகுதிகளாகப் பிரிக்க தங்கள் நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

Tuesday, 25 February 2014

5 ஆயிரம் ஊழியர்களை நீக்க குவான்டாஸ் விமான நிறுவனம் முடிவு?

பிரபல ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவான்டாஸ், சமீப காலமாக விமான எரிபொருள் செலவு உயர்வு, மானியம் பெறுவதில் விமான நிறுவனங்களுக்கிடையேயான கடுமையான போட்டி ஆகியவற்றின் காரணமாக கடனில் சிக்கித்தவித்து வருகிறது.


இந்நிலையில், குவான்டாஸ் நிறுவனம் தனது இடைக்கால நிதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டடுள்ளதாக இதில் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் குவான்டாஸ் நிறுவனம் தன்னுடைய செலவுகளை சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அளவிற்கு குறைக்கவிருப்பதால் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை நீக்க வாய்ப்புள்ளதாக சிட்னியை சேர்ந்த செய்தி நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்நிறுவனம் இந்த ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

Monday, 24 February 2014

ஜப்பான் தீவில் மீண்டும் சீன கப்பல்கள் புகுந்தன: அமெரிக்கா கண்டனம்

ஜப்பான் மேற்கு பகுதியில் சென்காஸ் என்ற தீவு கூட்டம் உள்ளது. இவை ஜப்பானுக்கு சொந்தமானதாகும். இந்த தீவுகள் தங்களுக்கு தான் சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு ஜப்பான் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதனால் ஜப்பானை மிரட்டும் வகையில் சீனா அடிக்கடி தனது போர் கப்பல்களை அந்த தீவு பகுதிக்கு அனுப்பி வருகிறது.


இந்த நிலையில் நேற்று மீண்டும் 3 போர் கப்பல்களை சீனா தீவு பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளது. அந்த போர் கப்பல்கள் தீவுக்கு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. சீனா மீண்டும் போர் கப்பல்களை அனுப்பி வைத்ததற்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்து உள்ளது

Friday, 21 February 2014

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய அமைப்புகளை தாக்க பாகிஸ்தான் ஆதரவு படைகள் முயற்சி

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ஆதரவுப்படைகள் இவ்வாண்டு இறுதியில் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய பின், அங்கு தங்கியுள்ள இந்திய அமைப்புகளை தாக்குவதற்கு பாகிஸ்தான் ஆதரவு படைகள் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பற்பல முதலீடுகள் போன்றவை நன்கு செயல்பட்டு கொண்டிருப்பதால், இந்தியா தனது பாதுகாப்பு படைகளை அங்கு அனுப்பி வைத்தால் பாகிஸ்தான் ஆதரவு படைகளின் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மேலும் ஈரான் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் நாட்டுடன் போர் ஏற்படுவதை தவிர்க்க ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா தனது முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இம்முயற்சியில் இந்தியா மற்றும் ஈரான் நாடுகள் இணைந்து செயல்படவேண்டும். ஆப்கானிஸ்தானிலுள்ள பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான ஹக்கானி, காபூலில் தாக்குதலை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

“இங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் பயங்கர ஆயுதங்களை வழங்க இருப்பதாகவும் எல்லைப்பகுதியில் இந்த ஆயுத பரிமாற்றம் நடைபெறலாம்” எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 20 February 2014

'வாட்ஸ்அப்’-ஐ 16 பில்லியன் டாலர்களுக்கு ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் வாங்குகிறது

காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.


செல்போன்’, எதிர்முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’ ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்’, ’ஃபேஸ்புக்’, ’ட்விட்டர்’ போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸ்அப்’ என்ற அப்ளிகேஷன் (மென்பொருள்) இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம் என்பதால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் 'வாட்ஸ்அப்’-ஐ பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து வைத்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி பலன் அடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் 'வாட்ஸ்அப்’க்கு கூடி வரும் மவுசை கண்டு பலரும் வியந்து வரும் நிலையில், நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வாய்த்த புதிய தூதுவனாக கருதப்படும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் 'வாட்ஸ்அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வாங்க முன்வந்துள்ளது.

இந்த தொகையில் 4 பில்லியன் டாலர்களை ரொக்கமாகவும், 12 பில்லியன் டாலர்களை பங்குகளாகவும் வழங்க ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையொப்பமாகியுள்ளதாக தெரிகிறது.

Wednesday, 19 February 2014

பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.

 இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.

இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. இது 3 கால்பந்து மைதானம் அளவு பெரியது. அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறந்து வருகிறது. இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர்.

இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘ரொபோடிக் டெலஸ்கோப்’’ மூலம் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இத்தகவல் ஸ்தூக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.