Thursday, 27 February 2014

2 இந்திய அமெரிக்கர்களுக்கு உலகப் புகழ்பெற்ற ஹெயின்ஸ் விருது

உலகப் புகழ்பெற்ற ஹெயின்ஸ் விருது கலை, சூற்றுச்சூழல், பொதுக் கொள்கை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுவோருக்கு 2,50,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பணமும், அமெரிக்க செனட்டர் ஜான் ஹெயின்ஸ்-ன் உருவம் பொறித்த பதக்கமும் வழங்கப்படுகிறது.


அந்த வகையில் 19-வது ஹெயின்ஸ் விருது வழங்கும் விழா, வரும் ஏப்ரல் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ளது. உலகம் முழுவதும் ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கப்படும் ஹெயின்ஸ் விருதுக்கு இந்த ஆண்டு அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆப்ரகாம் வர்கீஸ் மற்றும் சஞ்சீவ் அரோரா ஆகிய இருவர் தோ்வு செய்யப்பட்டுள்ளனர்.

விமர்சன ரீதியாக பாராட்டப்பெற்ற சிறப்பாக விற்பனையாகும் புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் என்பதற்காக ஸ்டான்போர்டை சேர்ந்த ஆப்ரகாம் வர்கீஸ்க்கும், வீடியோ கான்பரன்சிங் தொழில்நுட்பம் மூலம் சமூக சுகாதார மையம் அமைப்பதில் புரட்சியை ஏற்படுத்திய அல்பூகெர்க் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் அரோராவுக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.

இந்த விருது முன்னாள் அமெரிக்க செனட்டர் ஜான் ஹெயின்ஸ் நினைவாக ஹெயின்ஸ் குடும்ப அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

Wednesday, 26 February 2014

உக்ரைன் பிரிவினை கருத்துக்கு அமெரிக்கா-இங்கிலாந்து மறுப்பு

உக்ரைனில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் ரஷ்ய ஆதரவு அதிபரான விக்டர் யனுகோவிச் பதவியிறக்கம் செய்யப்பட்டது பனிப்போர் காலத்திய கிழக்கு, மேற்கு பிரிவினைகளை வெளிப்படுத்தியது என்ற தகவலை அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய இரு நாடுகளுமே நேற்று மறுத்துள்ளன.


ரஷ்யாவிற்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் உள்ள அதிகார யுத்தத்தில் வெற்றி பெற்றவர்களின் வெளிப்பாடே உக்ரைனில் காணப்படும் அரசியல் நிலைமை என்பதை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரியும், இங்கிலாந்து நாட்டின் வெளியுறவு செயலரான வில்லியம் ஹேகும் நிராகரித்தனர்.

மேலும், உக்ரைனின் மக்கள் அமைதியாக தங்களின் ஜனநாயக எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் ரஷ்யா மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து அந்நாட்டிற்கு உதவ வேண்டும் என்று இருவருமே வலியுறுத்தினர். ஜனநாயக அரசிற்கான தங்களுடைய விருப்பங்களை வெளிப்படையாகப் பேசிய உக்ரைன் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய கடமைப்பட்டுள்ளதாக ஜான் கெர்ரி கூறினார்.

இது கிழக்கு, மேற்கு நாடுகளுக்கான பூஜ்ய வட்ட விளையாட்டு அல்ல. மேலும், உக்ரைனின் தற்போதைய நிலவரம் ரஷ்யா, அமெரிக்கா போன்ற எந்த நாடுகளின் தேர்வும் அல்ல. இது முழுக்க, முழுக்க உக்ரைன் மக்கள் தங்கள் நாட்டு நலனுக்காகச் செயல்படுவது ஆகும். இன்று முதல் அமைதியான தீர்வு கிடைக்க அனைவருமே இணைந்து பணி புரிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹேகும் இந்த கருத்துகளுக்கு ஒத்த கருத்துகளையே வெளியிட்டார். பாலியல் வன்முறை குறித்த ஒரு அரசுத்துறை கருத்தரங்கில் பேச வந்த இருவரும் முன்னாள் சோவியத் குடியரசு நாடான உக்ரைனை மேற்கத்திய அல்லது ரஷ்ய சார்பு பகுதிகளாகப் பிரிக்க தங்கள் நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர்.

Tuesday, 25 February 2014

5 ஆயிரம் ஊழியர்களை நீக்க குவான்டாஸ் விமான நிறுவனம் முடிவு?

பிரபல ஆஸ்திரேலிய விமான நிறுவனமான குவான்டாஸ், சமீப காலமாக விமான எரிபொருள் செலவு உயர்வு, மானியம் பெறுவதில் விமான நிறுவனங்களுக்கிடையேயான கடுமையான போட்டி ஆகியவற்றின் காரணமாக கடனில் சிக்கித்தவித்து வருகிறது.


இந்நிலையில், குவான்டாஸ் நிறுவனம் தனது இடைக்கால நிதி முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 300 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டடுள்ளதாக இதில் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் குவான்டாஸ் நிறுவனம் தன்னுடைய செலவுகளை சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் அளவிற்கு குறைக்கவிருப்பதால் சுமார் 5 ஆயிரம் பணியாளர்களை நீக்க வாய்ப்புள்ளதாக சிட்னியை சேர்ந்த செய்தி நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்நிறுவனம் இந்த ஆய்வு முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

Monday, 24 February 2014

ஜப்பான் தீவில் மீண்டும் சீன கப்பல்கள் புகுந்தன: அமெரிக்கா கண்டனம்

ஜப்பான் மேற்கு பகுதியில் சென்காஸ் என்ற தீவு கூட்டம் உள்ளது. இவை ஜப்பானுக்கு சொந்தமானதாகும். இந்த தீவுகள் தங்களுக்கு தான் சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கு ஜப்பான் தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. இதனால் ஜப்பானை மிரட்டும் வகையில் சீனா அடிக்கடி தனது போர் கப்பல்களை அந்த தீவு பகுதிக்கு அனுப்பி வருகிறது.


இந்த நிலையில் நேற்று மீண்டும் 3 போர் கப்பல்களை சீனா தீவு பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளது. அந்த போர் கப்பல்கள் தீவுக்கு அருகே 12 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. சீனா மீண்டும் போர் கப்பல்களை அனுப்பி வைத்ததற்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்து உள்ளது

Friday, 21 February 2014

ஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய அமைப்புகளை தாக்க பாகிஸ்தான் ஆதரவு படைகள் முயற்சி

ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க ஆதரவுப்படைகள் இவ்வாண்டு இறுதியில் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிய பின், அங்கு தங்கியுள்ள இந்திய அமைப்புகளை தாக்குவதற்கு பாகிஸ்தான் ஆதரவு படைகள் திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவை சேர்ந்த கடற்படை பகுப்பாய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் பற்பல முதலீடுகள் போன்றவை நன்கு செயல்பட்டு கொண்டிருப்பதால், இந்தியா தனது பாதுகாப்பு படைகளை அங்கு அனுப்பி வைத்தால் பாகிஸ்தான் ஆதரவு படைகளின் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். மேலும் ஈரான் நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் அம்மையம் தெரிவித்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் நாட்டுடன் போர் ஏற்படுவதை தவிர்க்க ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து இந்தியா தனது முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இம்முயற்சியில் இந்தியா மற்றும் ஈரான் நாடுகள் இணைந்து செயல்படவேண்டும். ஆப்கானிஸ்தானிலுள்ள பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான ஹக்கானி, காபூலில் தாக்குதலை நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.

“இங்குள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் பயங்கர ஆயுதங்களை வழங்க இருப்பதாகவும் எல்லைப்பகுதியில் இந்த ஆயுத பரிமாற்றம் நடைபெறலாம்” எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, 20 February 2014

'வாட்ஸ்அப்’-ஐ 16 பில்லியன் டாலர்களுக்கு ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் வாங்குகிறது

காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது.


செல்போன்’, எதிர்முனையில் இருப்பவரின்  முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட ‘3-ஜி செல்போன்’ ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்’, ’ஃபேஸ்புக்’, ’ட்விட்டர்’ போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது.

இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸ்அப்’ என்ற அப்ளிகேஷன் (மென்பொருள்) இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை எவ்வித செலவுமின்றி, உலகின் எந்த மூலையில் உள்ள நபருக்கும் அரை நொடிக்குள் அனுப்பி விடலாம் என்பதால், இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானோர் தங்களது செல்போன்களில் 'வாட்ஸ்அப்’-ஐ பதிவிறக்கம் (டவுன்லோட்) செய்து வைத்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் சுமார் 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி பலன் அடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் 'வாட்ஸ்அப்’க்கு கூடி வரும் மவுசை கண்டு பலரும் வியந்து வரும் நிலையில், நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வாய்த்த புதிய தூதுவனாக கருதப்படும் ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் 'வாட்ஸ்அப்’ நிறுவனத்தை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) வாங்க முன்வந்துள்ளது.

இந்த தொகையில் 4 பில்லியன் டாலர்களை ரொக்கமாகவும், 12 பில்லியன் டாலர்களை பங்குகளாகவும் வழங்க ‘ஃபேஸ்புக்’ நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையொப்பமாகியுள்ளதாக தெரிகிறது.

Wednesday, 19 February 2014

பூமியை தாக்க பாய்ந்து வரும் ராட்சத விண்கல்: கால்பந்து மைதானம் போல் 3 மடங்கு பெரியது

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. இவற்றை எரி கற்கள் என்றும் அழைப்பதுண்டு. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன.

 இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.

இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. இது 3 கால்பந்து மைதானம் அளவு பெரியது. அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறந்து வருகிறது. இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர்.

இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘‘ரொபோடிக் டெலஸ்கோப்’’ மூலம் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இத்தகவல் ஸ்தூக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

Tuesday, 18 February 2014

எம்.பி.க்களின் கடும் அமளிக்கிடையே தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் தெலுங்கானா மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தெலுங்கானா பிரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா எம்.பி.க்கள் கடும் அமளி செய்தனர். மிளகுப்பொடி வீசப்பட்டதால் சபை ஒத்தி வைக்கப்பட்டது.


இதையடுத்து தெலுங்கானா மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.க.வின் உதவியை காங்கிரஸ் தலைவர்கள் நாடினார்கள். அப்போது தெலுங்கானா மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட வேண்டும், சீமாந்திராவுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என பா.ஜ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். பா.ஜ.க. தலைவர்கள் கேட்டுக்கொண்டதுபோல இன்று மீண்டும் பாராளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவை மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே தாக்கல் செய்தார். அப்போதும் எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் கோஷமிட்டதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பிற்பகல் 3 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது, தெலுங்கானா மசோதா மீது எம்.பி.க்கள் கருத்தை கேட்கவும், விவாதம் நடத்தவும் பா.ஜ.க. தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, எம்.பி.க்கள் ஏற்கனவே கூறியுள்ள சுமார் 67 திருத்தங்களை செய்ய மத்திய அரசு முன்வந்தது. திருத்தங்களுடன் கூடிய மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டது.

அப்போது சீமாந்திரா மக்களின் கவலைகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் பா.ஜனதா வலியுறுத்தியது. இதற்கு பதிலளித்த உள்துறை மந்திரி ஷிண்டே, சீமாந்திரா பகுதிக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவித்தார்.

பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டதால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆந்திர எம்.பி.க்கள் அவைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை சபை காவலர்கள் வெளியேற்றினர்.

இந்த அமளிக்கிடையே மசோதாவுக்கு ஆதரவாக பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. இதனால் திருத்தங்களுடன் கூடிய தெலுங்கானா மசோதா மக்களவையில் நிறைவேறியது. இதையடுத்து தெலுங்கானா பகுதியில் மக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் விவாதம் மற்றும் வாக்கெடுப்பின்போது தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மக்களவையின் கதவுகள் மற்றும் பார்வையாளர் கேலரிகள் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Monday, 17 February 2014

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது

வடக்கு பிலிப்பைன்சில் 5.3 ரிக்டர் அளவு கொண்ட பூகம்பம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக எந்த விவரமும் வெளியாகவில்லை.
அந்நாட்டின் தலைமை நில அதிர்வு நிபுணரான ரெனட்டோ சொலிடம் இது குறித்து கூறுகையில், நாட்டின் முக்கிய தீவான லுசானின் வடக்கு கடற்கரை பகுதியில் இப்பூகம்பம் மையம் கொண்டிருந்தது என்றார். இதனால் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அந்நாட்டில் கடந்த அக்டோபர் 15ந் தேதி நிகழ்ந்த 7.1 ரிக்டர் அளவுள்ள பூகம்பத்தால் 200 பேர் பலியானதுடன், சர்ச்சுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது. எரிமலைகளின் தாக்கத்தால் உருவான தீவுப்பகுதியான பிலிப்பைன்ஸ், பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையமாக காணப்படுவதுடன் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகவும் அறியப்படுகிறது.

Friday, 14 February 2014

பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்த இந்திய விஞ்ஞானி

கடைகளில் விற்பனை செய்யும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் போட்டு வழங்கப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் பைகள் கழிவு பொருட்களாக குப்பையில் வீசப்படுகிறது.


பின்னர் அது மக்கா குப்பை ஆகி தீ வைத்து எரித்து வீணாக்கப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக் பைகளில் இருந்து டீசல் தயாரித்து விஞ்ஞானி ஒருவர் சாதனை படைத்துள்ளனர்.

அவரது பெயர் பிரஜேந்திர குமார் ஷர்மா. அமெரிக்க வாழ் இந்தயரான இவர் இல்லினாய்ஸ் ஆய்வு மையத்தில் விஞ்ஞானி ஆக பணிபுரிகிறார்.இவர் ‘பைரோலிசிஸ்’ முறையில் பிளாஸ்டிக் பைகளை எரித்து இதில் இருந்து 30 முதல் 50 சதவீதம் கச்சா எண்ணையை எடுத்து டீசல் தயாரித்துள்ளார்.
டீசல் மட்டுமின்றி இயற்கை எரிவாயு, நாப்தா, கேசோலின், மெழுகு, உராய்வு ஆயில் உள்ளிட்டவற்றையும் தயாரிக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Thursday, 13 February 2014

சீனா நிலவுக்கு அனுப்பிய விண்கலன் தொழில்நுட்ப கோளாறால் செயலிழந்தது


சீனா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் புதிய முயற்சியாக சந்திரனுக்கு ‘ஜாட் ரேபிட்’ (யூது) என்ற விண்கலத்தை அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் சென்று தரை இறங்கியது.


இதன் மூலம் சந்திரனில் விண்கலத்தை சேதம் இன்றி தரையிறக்கிய 3–வது நாடு என்ற பெருமையை சீனா அடைந்தது. இதற்கு முன் அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளே விண்கலத்தை தரை இறக்கி இருந்தது.

நிலவின் மேற்பரப்பு மற்றும் அங்கு இருக்கும் இயற்கை வளங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வுக்கலன் அனுப்பப்பட்டது. சந்திரனில் தரை இறங்கிய ஆய்வுக்கலன் சுமார் 9 மீட்டர் தூரம் ஊர்ந்து சென்று அந்த காட்சிகள் கொண்ட படங்களை பூமிக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், ஆய்வுக்கலனில் இயந்திர கட்டுப்பாட்டில் கோளாறு ஏற்பட்டதால் சரியாக இயங்கவில்லை. முற்றிலும் செயலிழந்து விட்டதால் ஆய்வுக்கலனை சரி செய்ய முடியாது என சீனா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

Wednesday, 12 February 2014

ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்: இங்கிலாந்து உறுதி

இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இந்த போர்க் குற்றம் குறித்து உலக நாடுகளும், ஐ.நா.வும் கடும் கண்டனம் தெரிவித்தன.


அதை தொடர்ந்து ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஏற்கனவே 2 தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில் அடுத்த (மார்ச்) மாதம் ஜெனீவாவில் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்சில் கூட்டம் நடக்கிறது. அதில், அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதிராக 3–வது தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

அதில், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு சுதந்திரம் வழங்கு வதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்படும் இந்த தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என இங்கிலாந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது.
போர்க்குற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த விதமான முன்னேற்ற நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. எனவே, இங்கிலாந்து அரசு உலக நாடுகளுடன் இணைந்து சர்வதேச விசாரணைக்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.இந்த தகவலை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Tuesday, 11 February 2014

இன்றும் கூட தெருவில் பணம் கிடந்தால் குனிந்து எடுக்க தயங்க மாட்டேன்: உலக கோடீஸ்வரர் பில் கேட்ஸ் விளக்கம்


உலகின் பெரும் செல்வந்தராக கருதப்படும் மைக்ரோ சாப்ட் அதிபர் பில் கேட்சின் ஒட்டு மொத்த வர்த்தக முதலீடு 72 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் அவருக்கு வட்டியாக மட்டும் ஒவ்வொரு வினாடியும் 114.16 டாலர்கள் கிடைத்து வருவதால் அவரது முதலீடு ஒவ்வொரு வினாடியும் உயர்ந்து கொண்டே வருகிறது.


இதன் வாயிலாக வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் லாபமும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து பெருகிக் கொண்டே போகிறது. வருமானத்தின் பெரும்பகுதியை உலக நாடுகளின் போலியோ ஒழிப்பு, எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரம் போன்றவற்றுக்காக செலவிட்டு வரும் அவர் இன்றும் கூட அன்றாடம் தான் சாப்பிட்ட தட்டுகளை இரவு வேளைகளில் தானே சுத்தம் செய்து வைப்பதில் மனநிறைவு கொள்கிறார்.

இந்நிலையில், அமெரிக்க அரசின் உளவு பார்க்கும் நடவடிக்கை, கேட்ஸ் அறக்கட்டளையின் தொண்டுகள், மற்றும் தனது தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் தொடர்பாக சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேற்று ‘ஆன் லைன்’ மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் சரமாரியாக பதில்களை அள்ளி வீசினார்.

இவற்றில் ஒரு கேள்விக்கு பதில் அளித்த பில் கேட்ஸ், ‘இன்றும் கூட தெருவில் 100 டாலர் நோட்டு கிடந்தால் அதை குனிந்து எடுக்க நான் தயங்க மாட்டேன். இதற்காக எனது நேரம் செலவாவதை பற்றி கவலைப்பட மாட்டேன்’ என்று அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

Monday, 10 February 2014

லாபம் அனைத்தையும் சம்பளமாக கொடுக்க முடியாது: மத்திய நிதி மந்திரி


சம்பள உயர்வை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் இன்று முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 78வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்து கூறியதாவது:-

லாபம் அனைத்தையும் பங்குகளுக்கான ஆதாயம் வழங்கவும், வங்கி ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளை உயர்த்தி வழங்கவும் பயன்படுத்த முடியாது.

லாபத்தின் குறிப்பிட்ட தொகை வங்கிகளுக்கு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தேவைப்படும் மூலதனத்தை அதிகரிப்பதற்கும், வங்கிகளை நடத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும்.மூலதனம் இருந்தால் மட்டுமே வங்கிகள் தங்கள் பங்குதாரர்களுக்கு பங்காதாயங்களை வழங்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

நாடு முழுவதும் உள்ள 27 பொதுத்துறை வங்கிகளின் 50,000 கிளைகளில் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, 7 February 2014

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க எந்த திட்டமும் இல்லை: நிதி அமைச்சகம்


சென்ற ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவில் 88.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது.


இதையடுத்து மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மூன்று முறை உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் தங்கத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது.

அரசின் இந்த நடவடிக்கைகளால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது 50 பில்லியன் டாலராக குறைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிதி அமைச்சகத்திற்கு தங்கத்தின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்த நிதியாண்டின் (மார்ச்) இறுதிக்குள் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று அண்மையில் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடப்பு கணக்கு பற்றாக்குறை இப்போது இருக்கும் அளவில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைப்பது குறித்து தற்போது எந்த திட்டமும் இல்லை என நிதித்துறை இணை மந்திரி ஜெ.டி. சீலம் மக்களவையில் தெரிவித்தார்.

Thursday, 6 February 2014

டெல்லியில் தனியார் மின் நிறுவனங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு சென்றார் கெஜ்ரிவால்


டெல்லி மாநிலத்திற்கு அங்குள்ள தனியார் மின் நிறுவனங்களே மின்சாரத்தை வழங்கி வந்தன. அங்கு மின் கட்டணங்கள் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் மின் கட்டணத்தை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.


அக்கட்சி ஆட்சி அமைத்தவுடன் தாங்கள் கூறியது போலவே மின் கட்டணத்தை 50 சதவிகிதம் வரை குறைத்து உத்தரவிட்டது. ஆனால் டெல்லி அரசுக்கு மின்சாரம் வழங்கும் அனில் அம்பானிக்கு சொந்தமான இரு தனியார் மின் நிறுவனங்கள் 8 சதவிகித அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார். இரு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்யும் முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக தங்கள் அரசுக்கு உதவுமாறு அக்கட்சி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் மீது கேட்டுக்கொண்டுள்ளது. இவ்வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

Wednesday, 5 February 2014

ஹாலிவுட் நடிகர் மரணம் எதிரொலி: நியூயார்க்கின் பிரபல ஹெராயின் வியாபாரிகள் சுற்றி வளைப்பு

பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சிமோர் ஹாப்மேன் (46). இவர் ‘மிஷன் இம்பாசிபில்–3’, ‘போகி நைட்ஸ்’, ‘பிக் லெபோஸ்கி’ உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.


அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மேன் ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்த இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாகி விட்ட ஹாப்மேன் அப்பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான தீவிர சிகிச்சை பெற்று வந்தார். எனினும், அவரை பற்றிக் கொண்ட போதை அரக்கனிடம் இருந்து அவரால் மீள முடியவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் மேன் ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் ஹாப்மேன் பிணமாக கிடந்தார். அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது. எனவே அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் அவர்  மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஹாப்மேனின் படுக்கையறையை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது ஹாப்மேன் மறைத்து வைத்திருந்த 65 பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து, மறைந்த ஹாப்மேனின் செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த எண்கள், அவரது இ-மெயில் தொடர்புகள் ஆகியவற்றை துல்லியமாக ஆய்வு செய்த நியூயார்க் நகர போலீசார், அவற்றின் அடிப்படையில் பிரபல ஹெராயின் மொத்த வியாபாரிகள் 4 பேரின் ரகசிய இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஏராளமான போதைப் பொருட்களும், இதர வியாபாரிகள் தொடர்பான விபரங்களும் கைப்பற்றப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல இடங்களில் போதைப் பொருள் ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

Tuesday, 4 February 2014

உலகம் முழுவதும் பெருகிவரும் புற்றுநோய்: உலக சுகாதார மையம் எச்சரிக்கை

உலகம் முழுவதும் மக்களிடம் அலை அலையாய் புற்றுநோய் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக புற்றுநோய் மக்களை பாதிக்காமல் இருக்க மது மற்றும் சர்க்கரை உபயோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என அது வலியுறுத்தியுள்ளது.


2035ல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 24 மில்லியனை எட்ட வாய்ப்புள்ள நிலையில் முறையான நடவடிக்கை எடுத்தால் அதை பாதியாக குறைக்க முடியும் என சுகாதார மையம் தெரிவித்துள்ளது. புற்றுநோயை தடுக்கும் நோக்கில் புகைப்பிடித்தல், உடல் பருமன் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை எடுப்பதே தற்போது உலகின் முன் உள்ள உண்மையான தேவையாகும் என மையம் கூறியுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனை எட்டியுள்ள நிலையில் 2025ல் அது 19 மில்லியனாகவும், 2030ல் 22 மில்லியனாகவும், 2035ல் 24 மில்லியனாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார மையம் கூறியுள்ளது.

Monday, 3 February 2014

93 வயதில் கின்னஸ் சாதனை படைத்த யோகா ஆசிரியை

கைத்தடியுடன் தட்டுத்தடுமாறி, தள்ளாடி நடக்கும் வயதில் கூட, இளம்பெண்ணைப் போன்ற உற்சாகத்துடன் ‘யோகாசன’ கருத்தரங்கங்களில் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தும் 93 வயது அமெரிக்கப் பெண், ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற சிறப்புத் தகுதியுடன் உலக சாதனைகளை பதிவு செய்யும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.


சுதந்திரத்துக்கு முந்தைய இந்தியாவில், பிரான்ஸ் நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த 'பிரெஞ்சு சேரி' என்று முன்னர் அழைக்கப்பட்டு, தற்போது புதுச்சேரியாக மாறிபோன புதுவையின் கடலோர கிராமம் ஒன்றில் பிறந்த டாவோ பொர்ச்சான் லின்ச், சிறுமியாக இருக்கும் போதே புதுச்சேரி கடற்கரை ஓரங்களில் அணி, அணியாக பலர் யோகாசன கலைக்கான பயிற்சியில் ஈடுபடுவதை மிகவும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.

இதனால், இளமைக் காலத்தில் இருந்தே அவருக்கு யோகா கலையின் மீது அளவுகடந்த ஈர்ப்பு ஏற்பட்டது. அந்த ஈர்ப்பின் விளைவாக யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அக்கலையினை முழுமையாக கற்று தேர்ந்த டாவோ பொர்ச்சான் லின்ச், பின்னாளில் அமெரிக்கா சென்று குடியேறினார்.

மேலைநாட்டு ‘பால்ரூம்’ நடனக்கலையை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்த இவர், பல்வேறு நடனப் போட்டிகளில் பங்கேற்று, ஐரோப்பிய கண்டத்தின் அழகிய (நடன) கால்களுக்கு சொந்தமானவர் என்ற சிறப்பு பட்டம் உள்ளிட்ட ஏராளமான பரிசுகளையும், பாராட்டுக்களையும் நடன துறையில் இவர் அள்ளிக் குவித்துள்ளார்.

எனினும், மேலைநாட்டு மோகத்தில் முற்றிலுமாக மூழ்கி விடாமல், இந்தியாவின் பழம்பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசானத்தை பயிற்றுவிப்பதற்காக நியூயார்க் நகரில் 'வெஸ்ட்செஸ்டர் யோகாசன பயிற்சி மையம்' என்ற பள்ளியை தொடங்கினார்.

கடந்த 70 ஆண்டு காலமாக இடைவிடாது யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் இவர், தற்போது தனது 93-வது வயதிலும் அமெரிக்கா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, யோகாசனம் தொடர்பான கருத்தரங்கங்களில் துடிப்புடன் பங்கேற்கிறார்.

யோகாசன கலையைப் பற்றிய நுணுக்கங்களை தனது சொற்பொழிவு மற்றும் செய்முறை விளக்கங்களின் வாயிலாக இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்தும் வருகிறார்.

யோகா கலையின் மீது இளம்வயதில் இவர் கொண்ட தீராத காதலை ‘கின்னஸ்’ புத்தகம் தற்போது அங்கீகரித்துள்ளது. ‘செயல்பாட்டுடன் இருக்கும் உலகின் வயது முதிர்ந்த யோகா ஆசிரியர்’ என்ற வகையில் டாவோ பொர்ச்சான் லின்ச்-சின் பெயர் கின்ன்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.