Friday, 17 January 2014

இலங்கை சிறையில் இருந்த மண்டபம் மீனவர்கள் 10 பேர் விடுதலை

மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக இந்தியா-இலங்கை மீனவ பிரதிநிதிகள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், இரு நாட்டு சிறைகளிலும் உள்ள மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இலங்கை சிறையில் இருந்த காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்கள் 52 பேர் விடுதலை செய்யப்பட்டு, இந்திய கடலோரக் காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் நேற்று பத்திரமாக சொந்த ஊர் திரும்பினர். மேலும், பல மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 2-ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மண்டபம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து அவர்கள் இன்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்று இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் அவர்களின் நீதிமன்றக் காவலை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அவர்கள் 10 பேரையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து அவர்கள் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, விரைவில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, 16 January 2014

மூன்று அமெரிக்க ராணுவ ராக்கெட்டுகளை ரகசியமாக ஏவியது நாசா

அமெரிக்க ராணுவத்தின் ரகசிய பயணங்களை உள்ளடக்கிய மூன்று ராக்கெட்டுகளை நாசா இன்று விண்ணில் ஏவியது. டெர்ரியர்-ஆனியன் என்ற இந்த ராக்கெட்டுகளை 20 விநாடி வித்தியாசத்தில், அதிகாலை 4.09 மணிக்கு தொடர்ச்சியாக விண்ணில் செலுத்தி நாசா சாதனை படைத்துள்ளது.


நாசா அதிகாரிகளிடம் ராக்கெட் எப்போது ஏவப்பட்டது என்ற தகவலை வெளியிட வேண்டாம் என அமெரிக்க பாதுகாப்பு துறை கூறியது குறிப்பிடத்தக்கது.

இரு அடுக்கு சுழற்சி கொண்ட இந்த ராக்கெட்டுகள் 1315 கிலோ எடை கொண்டதாகவும், 91 கிலோ எடையுள்ள பொருளை 200 கி.மீ உயரத்திற்கு சுமக்கும் சக்தியும், 363 கிலோ எடையுள்ள பொருளை(வெடிகுண்டு) 80 கி.மீ உயரத்திற்கு சுமக்கும் சக்தியும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Monday, 13 January 2014

பால் பவுடருக்குள் மறைத்து 6 1/2 கிலோ தங்கத்தை சார்ஜாவில் இருந்து கடத்த முயன்ற இருவர் கைது

சார்ஜாவில் இருந்து 55 தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற 2 பேரை சுங்கத்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். சார்ஜாவில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு நேற்று புறப்பட தயாராக் இருந்த விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் பலர் சுங்கப் பரிசோதனை பகுதி அருகே வரிசையில் காத்திருந்தனர்.
அவர்களில் இருவர் கொண்டு சென்ற டப்பாக்களை பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவற்றில் என்ன இருக்கிறது? என்று அதிகாரிகள் கேட்டபோது, இருவரும் முரண்பாடான பதில்களை கூறினர். தனியான பகுதிக்கு அவர்களை அழைத்து சென்று, டப்பாக்களை உடைத்து பரிசோதித்தபோது, பால் பவுடருக்குள் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6.41 கிலோ கிராம் எடையுள்ள 55 தங்க பிஸ்கட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சார்ஜாவில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை மறைத்து, கடத்த முயன்றது ஏன்? என போலீசார் விசாரித்தபோது, 'அந்த 55 தங்க பிஸ்கட்களையும் வங்காளதேசத்துக்கு கொண்டு சென்று விற்று விடலாம். அதன் மூலம் ஒரு பெரிய தொகை லாபமாக கிடைக்கும் என்று தீர்மானித்தோம்.

வெளிப்படையாக எடுத்து சென்றால் எங்கள் நாட்டு சுங்கத்துறையினர் அந்த தங்கத்துக்கு இறக்குமதி வரியை வசூலிப்பார்கள். வரியை கட்டிய பிறகு அதிக லாபம் சம்பாதிக்க முடியாது. அதனால் தான், தங்க பிஸ்கட்களை பால் பவுடருக்குள் மறைத்து கொண்டு செல்ல முயன்றோம்’ என்று பிடிபட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

சார்ஜாவின் விலை நிலவரப்படி பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 10 லட்சம் திர்ஹம் என தெரிய வந்துள்ளது.இதேபோல், 699 கிராம் எடையுள்ள 12 தங்க கட்டிகளை இந்தியாவுக்கு கடத்தி செல்ல முயன்ற ஒருவரையும் சார்ஜா போலீசார் நேற்று முன்தினம்  கைது செய்தது நினைவிருக்கலாம்.

எங்கள் நாட்டின் சட்டங்களை மீறிய வகையில் இது போன்று கள்ளத்தனமாக இங்கிருந்து பொருட்களை கடத்த முயற்சிப்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சார்ஜா போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

Friday, 10 January 2014

தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார்: அமெரிக்கா சட்ட பாதுகாப்பு வழங்கியது

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய துணை தூதராக பணியாற்றிய தேவயானி கோப்ரகடே விசா மோசடி மற்றும் பெண் ஊழியரின் சம்பள மோசடி புகார்களுக்காக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க தூதர்களின் சலுகைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.


இதற்கிடையே தேவயானி மீதான வழக்கு விசாரணை வருகிற 13–ந்தேதி நியூயார்க் கோர்ட்டில் நடைபெறுவதாக இருந்தது. இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று நியூயார்க் கோர்ட்டில் தேவயானி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.இதற்கிடையே, இந்த வழக்கில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தேவயானிக்கு இந்த வழக்கில் இருந்து அமெரிக்கா முழு தூதரக விதிவிலக்கு அளித்து சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளது.

இது தொடர்பான கடிதத்தை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பிரீத் பாராரா மாவட்ட நீதிபதி ஷிரா ஷெயின்ட் லினுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதை தொடர்ந்து பெண் ஊழியர் சங்கீதா ரிச்சர்ட்டுக்கு விசா வாங்க மோசடி செய்தல் மற்றும் அதற்காக பொய் தகவல்கள் கொடுத்தல் என்ற 2 குற்றச்சாட்டுகள் தேவயானி மீது பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்ல அனுமதியும் வழங்கப்பட்டது.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேவயானிக்கு அமெரிக்கா முழு தூதரக விதிவிலக்கு அளித்து சட்ட பாதுகாப்பு வழங்கியுள்ளதால் ஜி1 விசா கிடைத்துள்ளது.

எனவே, அவர் இன்று இந்தியா திரும்புகிறார் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இந்தியா புறப்படும் முன் நியூயார்க் விமான நிலையத்தில் தேவயானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானது. மற்றும் ஆதாரமற்றது. நான் நிரபராதி என்பதை கோர்ட்டில் நிருபிப்பேன் என்றார்.

மேலும், அவர் கூறும் போது எனது துறை மந்திரிக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் என் பக்கம் நின்ற நாட்டு மக்கள், அரசியல் வாதிகள் மற்றும் சக தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.தேவயானி இந்தியா திரும்பினாலும் அவர்மீதான வழக்கு விசாரணை அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 7 January 2014

அமெரிக்காவை மிரட்டும் பனிச் சுழல்காற்று: விமான போக்குவரத்து ரத்து

கடந்த சில நாட்களாக வட அமெரிக்காவை துருவ பனி சுழல்காற்று தாக்கி வருகிறது. இதனால் அங்கு கடும் பனி மழை கொட்டுகிறது.இதனால் அமெரிக்காவின் பல பகுதிகள் பனி மூடிக்கிடக்கின்றன. வீட்டை விட்டு பொது மக்கள் யாரும் வெளியே வரமுடியவில்லை. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் வட கிழக்கு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அடி உயரத்துக்கு பனி மூடிக்கிடக்கிறது. இந்த வார இறுதி வரை 3,700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மைனஸ் 51 டிகிரி அளவுக்கு குளிர் வாட்டுகிறது.

சிகாகோ, இல்லினாய்ஸ், மின்னாபாலிஸ் உள்ளிட்ட நகரங்களிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அங்கும் பள்ளிகள், அலுவலகங்கள் திறக்கப் படவில்லை. அமெரிக்காவில் பனிப்புயலுக்கு இதுவரை 16 பேர் பலியாகி உள்ளனர்.

கனடாவிலும் கடும் பனி சுழல்காற்று வீசுகிறது. இதனால் அங்கும் பனி கொட்டுகிறது. அங்கு மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தட்ப வெப்ப நிலை உள்ளது.தலைநகர் டொரண்டோவில் மைனஸ் 38 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இதனால் அங்கும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொது மக்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படவில்லை.

Friday, 3 January 2014

தெலுங்கானா விவகாரம்: ஆந்திர சட்டசபையில் கடும் அமளி

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மசோதா மீதான விவாதம் இன்று தொடங்குவதாக இருந்தது. சபை கூடியதும் ஆந்திர மாநில பிரிவினை குறித்து கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வற்புறுத்தினர்.
http://www.maalaimalar.com/2014/01/03124944/Telangana-issue-AP-Assembly-he.html


சபாநாயகர் இதற்கு அனுமதி மறுத்தார். உடனே எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தெலுங்குதேசம், ஒஸ்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம். எல்.ஏ.க்கள் சபாநாயகர் நாதெல்லா மனோகரனை முற்றுகையிட்டு ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து சபையை 30 நிமிடம் சபா நாயகர் ஒத்திவைத்தார்.

Thursday, 2 January 2014

காற்றழுத்த நிலை வலுப்பெற்றது: கடலோர தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.


அது தென்கிழக்கு அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் 24 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடலோர தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு மழை கிடைக்குமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.