Monday, 13 January 2014

பால் பவுடருக்குள் மறைத்து 6 1/2 கிலோ தங்கத்தை சார்ஜாவில் இருந்து கடத்த முயன்ற இருவர் கைது

சார்ஜாவில் இருந்து 55 தங்க பிஸ்கட்களை கடத்த முயன்ற 2 பேரை சுங்கத்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். சார்ஜாவில் இருந்து வங்காளதேச தலைநகர் டாக்காவுக்கு நேற்று புறப்பட தயாராக் இருந்த விமானத்தில் ஏறுவதற்காக பயணிகள் பலர் சுங்கப் பரிசோதனை பகுதி அருகே வரிசையில் காத்திருந்தனர்.
அவர்களில் இருவர் கொண்டு சென்ற டப்பாக்களை பார்த்த அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவற்றில் என்ன இருக்கிறது? என்று அதிகாரிகள் கேட்டபோது, இருவரும் முரண்பாடான பதில்களை கூறினர். தனியான பகுதிக்கு அவர்களை அழைத்து சென்று, டப்பாக்களை உடைத்து பரிசோதித்தபோது, பால் பவுடருக்குள் தங்க பிஸ்கட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 6.41 கிலோ கிராம் எடையுள்ள 55 தங்க பிஸ்கட்களையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்கள் இருவரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சார்ஜாவில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை மறைத்து, கடத்த முயன்றது ஏன்? என போலீசார் விசாரித்தபோது, 'அந்த 55 தங்க பிஸ்கட்களையும் வங்காளதேசத்துக்கு கொண்டு சென்று விற்று விடலாம். அதன் மூலம் ஒரு பெரிய தொகை லாபமாக கிடைக்கும் என்று தீர்மானித்தோம்.

வெளிப்படையாக எடுத்து சென்றால் எங்கள் நாட்டு சுங்கத்துறையினர் அந்த தங்கத்துக்கு இறக்குமதி வரியை வசூலிப்பார்கள். வரியை கட்டிய பிறகு அதிக லாபம் சம்பாதிக்க முடியாது. அதனால் தான், தங்க பிஸ்கட்களை பால் பவுடருக்குள் மறைத்து கொண்டு செல்ல முயன்றோம்’ என்று பிடிபட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்தனர்.

சார்ஜாவின் விலை நிலவரப்படி பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 10 லட்சம் திர்ஹம் என தெரிய வந்துள்ளது.இதேபோல், 699 கிராம் எடையுள்ள 12 தங்க கட்டிகளை இந்தியாவுக்கு கடத்தி செல்ல முயன்ற ஒருவரையும் சார்ஜா போலீசார் நேற்று முன்தினம்  கைது செய்தது நினைவிருக்கலாம்.

எங்கள் நாட்டின் சட்டங்களை மீறிய வகையில் இது போன்று கள்ளத்தனமாக இங்கிருந்து பொருட்களை கடத்த முயற்சிப்பவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சார்ஜா போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment