நெடுநாள் நண்பர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும் போது வழக்கமான
'வணக்கம்' மற்றும் நல விசாரிப்புக்கு பிறகு உபசாரம் என்று வரும் போது,
உலகம் முழுவதும் ஒரே சம்பிரதாயம் தான் கடைபிடிக்கப்படுகிறது.'என்ன சாப்பிடுறீங்க... டீயா?, காபியா?, 'கோக்கா'? என்ற சம்பிரதாய வார்த்தை
இல்லாமல் எந்த சந்திப்பும் முழுமை பெறுவதில்லை. அமெரிக்கா மற்றும்
மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு அன்றாடம் 1
லிட்டர் '
கோக்' ஆவது குடிக்காவிட்டால் மண்டை வெடித்து விடுவது போல்
ஆகிவிடும்.
'கோக்' என்ற அந்த இரண்டெழுத்து மந்திரத்துக்கு கட்டுண்டு கிடக்கும்
கோடானுகோடி மக்களில் பலருக்கு உலக பிரசித்தி பெற்ற 'கோக்கோ கோலா'வின் நதி
மூலம் (வாழ்க்கை வரலாறு) தெரிந்திருக்க நியாயமில்லை.அவர்களுக்கு உதவிடும் வகையில் இந்த தகவலை பறிமாறியுள்ளோம். வாசித்து
அறிந்து கொள்ளும் நீங்களும் இந்த தகவலை இதர நண்பர்களுடன் பகிர்ந்து
உதவுவீர்கள் என நம்புகிறோம்.
18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக்
கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில்
கரைத்து தந்தனர். இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த '
ரகசிய மருந்து' தான் நாளடைவில் பாட்டில்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற
வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது.
இங்குள்ள ஒரு பாதுகாப்பு
பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால
பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள்
தன்னிடம் இருப்பதாகவும், அவற்றை வெளியிடாமல் இருக்க ஒர் பெருந்தொகையை
கோக்கோ கோலா நிறுவனம் தனக்கு தர வேண்டும் என்றும் ஒருவர் மிரட்டல்
விடுத்தது நினைவிருக்கலாம். 1886ம் ஆண்டு தொழில் முறையாக தொடங்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள கோக்கோ கோலா
நிறுவனம் 1910ம் ஆண்டு ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் பெரும் பாதிப்பை
சந்தித்தது.
மெல்ல, மெல்ல அந்த பாதிப்பில் இருந்து விடுபட்டு
குளிர்பானங்களின் தயாரிப்பில் முடிசூடா மன்னனாக கோக்கோ கோலா இன்றளவும் திகழ்கிறது. உலகளாவிய
அளவில் சிறந்த வர்த்தக அடையாளப் பெயராக 2011ம் ஆண்டு கோக்கோ கோலா தேர்வு
செய்யப்பட்டது. கடந்த 128 ஆண்டுகளாக கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் எங்கோ ஓரிடத்தில்
பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது என்பது பலரும் அறிந்த சங்கதிதான்.
ஆனால், அட்லாண்டாவில் உள்ள தொழிற்சாலையில் உச்சகட்ட லேசர் விளக்குகளின்
பாதுகாப்பில் அந்த ரகசியம் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது சிலருக்கு
தெரிந்திருக்க வாய்ப்பில்லை.கடந்த ஆண்டு முதல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கோக்கோ கோலா பிரியர்கள் அந்த
பாதுகாப்பு பெட்டகத்தை காணும் போதே களைப்பு நீங்கி, களிப்படைந்து
வருகின்றனர்.
1977-ம் ஆண்டு
இந்தியாவை ஆட்சி செய்த மத்திய அரசு, 'வெளிநாட்டு நிறுவனமான
கோக்கோ கோலா, அதன் தயாரிப்பு ரகசியத்தை ஒப்படைத்து விட்டு, (அப்போது
கடுமையாக அமல்படுத்தப்பட்ட) அன்னிய செலாவனி ஒழுங்குமுறை சட்டத்தின்படி,
இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொண்டு
உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது.
ஆனால், தயாரிப்பு ரகசியத்தை ஒப்படைக்க மறுத்த கோக்கோ கோலா நிறுவனம்
இந்தியாவில் இருந்த தொழிற்சாலைகளை வேறொரு குளிர்பான தயாரிப்பு
நிறுவனத்துக்கு விற்றுவிட்டு நாட்டை விட்டு வெளியேறியது.அதன் பின்னர், மத்தியில் ஆட்சி மாறிய போது காட்சியும் மாறியது.
இதனையடுத்து, பொருளாதார தாராளமையம் என்ற கொள்கையுடன் இந்திய தொழில்
துறையில் உச்சவரம்பு ஏதுமின்றி அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய
அரசு முடிவு செய்தது.
இதனையடுத்து, கடந்த 1993-ம் ஆண்டு இந்திய குளிர்பான தயாரிப்பு துறையில்
மீண்டும் காலடி பதித்த கோக்கோ கோலா சுமார் 20 ஆண்டுகளாக விற்பனையில்
'சக்கைப்போடு' போட்டு இந்திய குளிர்பான சந்தையில் தனி இடத்தை
பிடித்துள்ளது.