Monday, 3 March 2014

திபெத்தியர்களின் ஆர்ப்பாட்டங்களை தடுக்க நேபாள அரசு நடவடிக்கை


சீன ஆட்சிக்கு எதிராக கடந்த 1959-ம் ஆண்டில் திபெத்தில் ஏற்பட்ட புரட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவர்களின் மதத் தலைவரான தலாய்லாமா இந்தியாவில் உள்ள தரம்சாலாவில் தஞ்சம் புகுந்து தனது ஆட்சியை நடத்தி வருகின்றார். இது மட்டுமின்றி அப்போது திபெத்தை விட்டு வெளியேறிய மக்களில் பெரும்பான்மையானோர் நேபாள் நாட்டில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் சீனா தங்கள் நாட்டைப் பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி அடிக்கடி தீக்குளிப்பு போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். தனி திபெத் கோரிக்கைகாக கடந்த ஆண்டு ஜனவரி வரை நூற்றுக்கும் மேற்பட்டோர் தீக்குளித்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்தவாரம் அவர்களது போராட்டங்களின் ஆண்டு நிறைவு வருகின்றது. இதனை ஒட்டி நேபாளில் வாழும் அகதிகள் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். சென்ற ஆண்டுப் போராட்டங்களின்போதும் இரண்டு பேர் தீக்குளித்து மாண்டனர். சீனத் தூதரகம் மற்றும் முக்கியக் கட்டிடங்களின் அருகே இவர்களின் ஆர்ப்பாட்டத்தை நடத்த நேபாள் அரசு அனுமதிப்பதில்லை. நட்பு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அனுமதிக்க நேபாள் அரசு விரும்பாததே இதற்குக் காரணமாகும்.

சீனாவும் இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துமாறு நேபாள் அரசுக்கு அழுத்தம் கொடுத்துவரும். கடந்த காலத்தில் சீனத் தூதரகத்தை முற்றுகையிடவும் திபெத்தியர்கள் முயற்சி செய்துள்ளனர். அப்போது பொதுவாக எதிர்ப்பாளர்கள் அந்தப் பகுதியில் இருந்து நீக்கப்பட்டு சில மணி நேரம் தடுத்து வைக்கப்படுவார்கள்.

அதேபோல் இந்த ஆண்டு திபெத்தியர்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதற்கு நேபாள் நாட்டு காவல்துறையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தீக்குளிப்பு முயற்சிகளையும் தடுக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

தலைநகர் காத்மாண்டுவில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடம் எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறைத் தலைவர் கேசி கணேஷ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment