Tuesday, 11 March 2014

மாயமான மலேசிய விமானம்: நேரில் பார்த்தவர்கள் வாக்குமூலம்

239 பயணிகளுடன் கடந்த 8-ம் தேதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென மாயமானது.

சீனா மற்றும் அமெரிக்க விமானங்கள் மற்றும் கப்பல்கள் கடந்த 2 நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தியும் அந்த விமானத்தை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த விமானம் கடலில் விழுந்து மூழ்கியிருக்கலாம். அல்லது, தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு இருக்கலாம் என்பது உள்பட பல்வேறு யூகங்கள் மேலோங்கி வரும் நிலையில், அந்த விமானத்தின் இறுதி நிமிடங்களை நேரில் பார்த்த சிலர் பேட்டியளித்துள்ளனர்.

மலேசியாவின் கம்பங் கொடாக் பகுதியில் வசிக்கும் அலிஃப் ஃபாத்தி அப்துல் ஹாதி என்பவர் சம்பவத்தன்று அதிகாலை 1.45 மணியளவில் வானத்தில் பெரிய ஒளிப்பிழம்பு தோன்றியதாக தெரிவித்துள்ளார்.சாதாரணமாக விமானத்தின் முகப்பு விளக்குகள் வானத்தில் உள்ள சிறிய நட்சத்திரங்கள் போல் காட்சியளிக்கும்.

ஆனால், நான் பார்த்த பிரமாண்டமான தீப்பிழம்பு மேகங்களின் பின்னணியில் சுமார் 5 நிமிடங்கள் நீடித்தது. சில வினாடிகளுக்குள் தாய்லாந்து கடல் எல்லை நோக்கி நகர்ந்து சென்று, திடீரென்று மறைந்து விட்டது என்று கூறும் இவர், சாதாரணமாக தனது வீட்டின் மேல் உள்ள வான்வழியில் அன்றாடம் பல விமானங்கள் கடந்து செல்வதாகவும், சம்பவத்தன்று பார்த்த விமானம் சராசரி பாதையை விட்டு விலகிச் சென்றதை கவனிக்க முடிந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது வீட்டில் இருந்து தெற்கே சுமார் 100 மைல் தொலைவில் வாழும் மீனவரான ஆஸித் இப்ராகிம் என்பவரும் அப்துல் ஹாதியின் வீடு இருக்கும் திசையை சுட்டிக்காட்டி, தீப்பற்றி எரிந்தபடி பறந்த ஒரு விமானம் தென்னந்தோப்பின் பின்புறமாக மறைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், மாயமான விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் பயணித்த 4 பேரில் ஒருவர் ஈரான் நாட்டை சேர்ந்த 19 வயது வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது.மேலும், அந்த விமானத்தில் சென்ற 11 பேரின் ‘ஸ்மார்ட் போன்’கள் இன்னும் இயங்கிக் கொண்டுள்ளன என அவர்களின் உறவினர்கள் பேட்டியளித்துள்ளனர்.

No comments:

Post a Comment