239 பயணிகளுடன் காணாமல் போன மலேசிய விமானம் ஒரு வாரத்திற்கு மேலாகியும் இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. இவ்விமானம் குறித்து நாள்தோறும் புதுப்புது சர்ச்சைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ரேடார் பார்வையில் இருந்து தப்பிக்கும் வகையில் விமானத்தை தாழ்வாக ஓட்டிச்சென்றிருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியானதையடுத்து, அந்த கோணத்திலும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இது தொடர்பாக மலேசிய அதிகாரிகள் இன்று கூறுகையில், “ரேடாரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பிறகு சுமார் 8 மணிநேரம் விமானம் பறந்துள்ளது. வங்காள விரிகுடாவின் மேற்பகுதியில் பறந்தபோது தான் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின்னர் ரேடார் பார்வையில் படாமல் 3 நாடுகளின் மேலே பறந்திருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தையும் அதன் அனைத்து தொழில்நுட்பக் கூறுகளையும் நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே இவ்வாறு செய்யமுடியும். மலைப்பாங்கான பகுதிகளில் 5000 அடிக்கு கீழ் விமானத்தை தாழ்வாகப் பறக்க செய்து ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.
விமானம் எங்காவது தரையிறங்கி அதன் என்ஜின் செயலிழந்து போயிருக்கலாம் அல்லது தரையில் மோதியிருக்கலாம். இதுபோன்ற பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது” என்றனர்.
மிகவும் ஆபத்தான இந்த தொழில்நுட்பத்தை ராணுவ பைலட்டுகள், தங்கள் இலக்குகளை ரகசியமாக சென்று கண்காணிப்பதற்காக பயன்படுத்துவார்கள்.
No comments:
Post a Comment