Wednesday, 19 March 2014

மலேசிய விமானம் மாயம்: காப்பீடு வழங்கும் பணி ஆரம்பம்

கடந்த 8-ந்தேதி அதிகாலை மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவன விமானம் மாயமானது. இதுவரை காணாமற்போன அந்த விமானம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எம்எச்-370 எண்ணுடைய போயிங் 777-200 ஈஆர் என்ற காணாமற்போன பயணிகள் விமானத்தின் காப்பீட்டு தரகர் வில்லிஸ் என்றும் காப்பீட்டு நிறுவனம் தங்களுடையது என்று அலையான்ஸ் நிறுவனம் சென்றவாரம் தெரிவித்தது.


மலேசியா விமானத்திற்கான அலையான்ஸ் குளோபல் கார்பொரேட் & சிறப்பு நிறுவனமும் மற்ற இணை மறுகாப்பீடுகளும் தங்களுடைய முதல்கட்ட காப்பீட்டுத் தொகையை அளிக்கத் தொடங்கியுள்ளதாக இந்நிறுவனம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காப்பீட்டுத் தரகர் வில்லிஸ் உடனான ஒப்பந்தமும், சாதாரணமாகக் கடைப்பிடிக்கப்படும் வர்த்தக சந்தை நடைமுறையும் ஆகும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. காப்பீடு செய்யப்பட்ட விமானத்தைக் காணவில்லை எனும்போது மேற்கொள்ளப்படும் எங்களுடைய ஒப்பந்த நடைமுறைகளுக்கான செயலில் இதுவும் ஒன்றாகும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காணாமற்போன விமானத்திற்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் சேர்த்து அளிக்கப்படும் காப்பீட்டுத் தொகை 100 மில்லியன் யூரோவைத் தாண்டும் என்று ஜெர்மனியின் வணிக ஏடான ஹான்டல்ஸ்பிலாட் முன்னர் தெரிவித்திருந்தது.

இந்தத் தொகையில் மறு காப்பீட்டு நிறுவனங்கள அளிக்க வேண்டியது எவ்வளவு என்பது தெளிவாகத் தெரியவில்லை. இதுகுறித்த விவரங்களைத் தெரிவிக்க அலையான்ஸ் நிறுவனம் மறுத்துள்ளது.

No comments:

Post a Comment