Thursday, 6 March 2014

எய்ட்ஸ் நோயுடன் பிறக்கும் குழந்தைகளை காப்பாற்றலாம்

சென்ற வருடம் அமெரிக்காவின் மிஸிசிபி மாகாணத்தில் எய்ட்ஸ் நோய் கொண்ட தாயாருக்குப் பிறந்த குழந்தை ஒன்றிற்கு அது பிறந்த 30 மணி நேரத்திற்குள் எய்ட்ஸ் நோய்க்குரிய மருந்துகள் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் தற்போது அது பூரண நலமுடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தபோது பலரும் இதுகுறித்த சந்தேகத்தை எழுப்பினர்.


ஆனால் அதன்பின் கலிபோர்னியா மாநிலத்தில் லாங் பீச் என்ற இடத்தில் எய்ட்ஸ் நோய் அறிகுறிகளுடன் பிறந்த குழந்தைக்கு அதே முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. 

தற்போது ஒன்பது மாதங்கள் நிறைந்துள்ள இந்தப் பெண் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், இன்னமும் மருந்துகள் கொடுக்கப்பட்டு வரும்போதிலும் அந்தக் குழந்தையிடம் மேற்கொள்ளப்பட்ட எய்ட்ஸ் நோய் சோதனைகள் நெகடிவ் என்ற முடிவைத் தந்துள்ளன என்றும் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மில்லர் குழந்தைகள் மருத்துவமனையின் டாக்டர் டெபோரா பர்சாத் தெரிவித்துள்ளார்.

நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற எய்ட்ஸ் நோய் கருத்தரங்கு ஒன்றில் இந்தத் தகவலை வெளியிட்ட ஆய்வாளர்கள் இதுபோன்று இன்னும் ஐந்து வழக்குகள் கனடாவிலும், மூன்று வழக்குகள் தென்னாப்பிரிக்காவிலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 

இன்னும் மூன்று மாதங்களுக்குள் இதே சிகிச்சை முறைகள் சோதனை முறை அடிப்படையில் 50 பச்சிளம் குழந்தைகளிடத்தில் மேற்கொள்ளப்படும் என்று கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டார்.சில வருடங்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படும்

இந்தக் குழந்தைகள் நோய்த் தாக்கத்திலிருந்து விடுபட்டால் ஆண்டுதோறும் இதே நோயுடன் பிறக்கும் 3,00,000 குழந்தைகளுக்கான சிகிச்சை நெறிமுறைகள் தொடங்கக்கூடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment