Tuesday, 31 December 2013

ஜப்பானில் பூகம்பம்: கட்டிடங்கள் குலுங்கின

ஜப்பான் நாட்டின் கிழக்குப் பகுதியில் இன்று அந்நாட்டு நேரப்படி காலை 10.03 மணி அளவில் 5.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வுகள் தோன்றின. தலைநகர் டோக்கியோவிலிருந்து 160 கி.மீ வடகிழக்கேயும், செயல்படாது இருக்கும் புகுஷிமா அணுஉலையிலிருந்து 80 கி.மீ தென்மேற்கேயும் உள்ள இபராகி எல்லையில் இந்த பூகம்பம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


10 கி.மீ ஆழம் வரை உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து எட்டு நிமிடங்கள் கழித்து 3.6 ரிக்டர் அளவிலான அதிர்வு ஒன்றும் அதே பகுதியில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதலில் தோன்றிய நிலநடுக்கத்தின் தாக்கத்தில் தலைநகர் டோக்கியோவில் உள்ள உயரமான கட்டிடங்கள் குலுங்கின.

ஆனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் புகுஷிமா அணுஉலையிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு சுனாமிப் பேரலைகளாலும், பூகம்பத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த அணுஉலை செயல்படாத நிலையை எட்டியுள்ளது.

இருப்பினும் இதன் உலைக்கூடங்களில் இருந்து தொடர்ந்து வெளியேறும் கதிரியக்கம் அவற்றைக் குளிர்விக்க சேமிக்கப்பட்டுள்ள நீர்த் தொட்டிகளில் கலந்து வெளியேறுகின்றது. இதனைத் தடுக்கும் முயற்சியில் விடுமுறைக் காலத்திலும் விஞ்ஞானிகள் அயராது பணி புரிந்து வருகின்றனர்.

மேற்கொண்டு ஏற்படும் பூகம்பத் தாக்குதல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளதால் இங்குள்ள நிலைமை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இன்றைய பூகம்பத்தினால் புகுஷிமா அணு ஆலைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று டோக்கியோ மின்சார நிறுவனம் தெரிவித்துள்ளது..

Monday, 30 December 2013

தமிழக மீனவர்கள் மீண்டும் சிறை பிடிப்பு: கருணாநிதி கண்டனம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழக மீனவர் பிரதிநிதிகளை பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அழைத்துச் சென்று மீனவர்கள் தங்களின் குறைகளை அவர்களிடம் நேரில் எடுத்துச் சொல்லி, பிரதமரும் ஜனவரி மாதம் 20–ந்தேதி வாக்கில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளையும், தமிழக மீனவர் பிரதிநிதிகளையும் சென்னையிலே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்த பின்னரும், புதுக்கோட்டை மீனவர்கள் 22 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.


மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்கள் மற்றும் வலைகள், டீசல் ஆகியவற்றையும் பறித்துச் சென்றிருக்கிறார்கள். சிறை பிடிக்கப்பட்ட 22 மீனவர்களும், இலங்கை காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட, ஜனவரி 10–ந்தேதி வரை அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

அண்மைக் காலத்தில் மட்டும் இதுவரை 227 மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்து கடந்த மூன்று மாதங்களாக சிறையிலே வைத்துள்ளது. அவர்களுடைய 77 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இலங்கைச் சிறையிலே உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, நாகையில் இந்த மாதம் 12–ந்தேதி முதல், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த விசைப்படகு, மற்றும் பைபர் படகு மீனவர்கள் சுமார் 7 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் நாகையில், 8 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் பேர் கடந்த 16–ந்தேதி முதல், கடலுக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 21–ந்தேதி முதல் நாகை வட்ட மீனவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத் தொடங்கினார்கள்.அவர்கள் நான்கு நாட்களாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த நிலையில், நான் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை உடனடியாக நாகைக்கு அனுப்பி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் செய்து, அவர்களின் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொள்ளச்செய்தேன்.

அங்கே உண்ணாவிரதம் இருந்த மீனவர்களின் பிரதிநிதிகள் 11 பேரை டி.ஆர்.பாலு, அந்தத் தொகுதியின் கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் தலைமையில் பிரதமரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் சந்திக்கச் செய்தேன். அவர்களும் சந்தித்து மனு அளித்து தாங்கள் அனுபவித்து வரும் துயரங்களை விளக்கியுள்ளனர்.
பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசி இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுவதாக உறுதியளித்துள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள செய்தி வந்திருப்பது மிகவும் கொடுமையானது.
இது மீனவர்களின் பிரச்சினை என்றால், இலங்கையில் உள்ள கிளிநொச்சி பகுதியில் படம் பிடித்துக் கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர், தமிழ் பிரபாகரன் என்பவரையும் சிங்கள அரசு கைது செய்தது.

அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்ததும், நானும் வேறு சில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தவுடன், அந்தப் பத்திரிகையாளர் தமிழ் பிரபாகரன், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தான் வட கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்ததாகவும், அத்து மீறிச் செயல்படவில்லை என்றும், புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தபோது இலங்கை ராணுவ வீரர்களால் துப்பாக்கி முனையில் வளைக்கப்பட்டதாகவும், இந்தியாவைச் சேர்ந்த பத்திரிகையாளன் என்று சொன்னதாகவும், உடனே அவர்கள் கை விலங்கிட்டு கைது செய்து சிறையில் அடைத்ததாகவும், அங்கே இந்தியர் என்றாலே மரியாதை கிடையாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையிலே இந்தியர் என்றால் எந்த அளவிற்கு மரியாதை கிடைக்கிறது என்பதை பத்திரிகையாளரின் இந்தப் பேட்டியிலிருந்தே இந்திய அரசு புரிந்து கொள்ளலாம். இதையும் தொடர்ந்து நேற்றையதினம் தமிழ் நாட்டைச் சேர்ந்த கணவன், மனைவி ஆகிய இருவரை சிங்கள போலீசார் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில், புடவை வியாபாரம் செய்வதற்காக அங்கே சென்றிருக்கிறார்கள். அவர்கள் மட்டக்களிப்பு பகுதியில் கைது செய்யப்பட்டதாகச் செய்தி வந்துள்ளது.
இதையெல்லாம் மத்திய அரசு உடனடியாக ஆழ்ந்த கவனத்திலே எடுத்துக் கொண்டு முறைப்படி இலங்கை அரசுக்குக் கடும் எச்சரிக்கை செய்து எதிர்வினையில் ஈடுபட்டாலொழிய பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தமிழகத்தின் சார்பாக மத்திய அரசு தொடர்ந்து கடிதங்களின் மூலம் வேண்டுகோள் விடுத்தும், கண் துடைப்பு காரியங்கள்தான் நடைபெறுகின்றனவே தவிர, ஆக்கப்பூர்வமாக மீனவர் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான தீவிர நேரடி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்பது தான் நமக்குத் தீராத வேதனையாக உள்ளது.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Friday, 27 December 2013

அமெரிக்க விசா கேட்டு மோடி விண்ணப்பிக்க கூடாது: அருண் ஜெட்லி கருத்து


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் எம்.பி.எசான் ஜாப்ரி உட்பட 68 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி உள்ளிட்ட 58 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழு, போதிய ஆதாரம் இல்லாததால், அனைவரும் குற்றமற்றவர்கள் என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்தது.

இதனை எதிர்த்து எசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி அகமதாபாத் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதில் மோடி மீது குற்றம் சாட்டியிருந்த அவர், மீண்டும் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, நரேந்திர மோடி குற்றமற்றவர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஜாகியா ஜாப்ரியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால், நரேந்திர மோடிக்கு இருந்த நெருக்கடி நீங்கியது.

இந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அமெரிக்க அரசாங்கம், மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்தது. இப்போது மோடி விடுவிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன், அவர் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, மோடி அமெரிக்க விசா கேட்டு விண்ணப்பிப்பதில் தனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்க முயற்சித்தது தவறு என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக தொடர்ந்து விசாரணை மேல் விசாரணை நடத்தப்பட்டது தவறு என்றும், அந்த விசாரணையைக் கருத்தில் கொண்டு மோடி குற்றமுள்ளவர் என அமெரிக்கா தீர்மானித்தது தவறு” என்றார்.

Thursday, 26 December 2013

இன்று 9–ம் ஆண்டு நினைவு நாள்: கடற்கரை கிராமங்களில் சுனாமி சோக சுவடுகள்

9 ஆண்டுகளுக்கு முன்னர் (2004– டிசம்பர் 26) இதே நாளில் ஆழ்கடலில் இருந்து எழும்பிய அலை அரக்கன் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனித உயிர்களை ருசி பார்த்தான். 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
அமைதியே உருவான கடல் அன்னையின் இன்னொரு கோர முகத்தை அப்போது தான் உலகம் கண்டது. சென்னையில் இருந்து குமரி வரை கடலோர கிராமங்களில் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமி பேரலைகள் ஆயிரக் கணக்கானோரை கடலுக்குள் அடித்துச்சென்றது. இவர்களில் யாரும் உயிர் தப்பவில்லை. அன்றைய தினம் கடற்கரை கிராமங்கள் முழுவதும் மரண ஓலம் ஒலித்தது. தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது.


நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி என அனைத்து மீனவ கிராமங்களிலும் கொத்து கொத்தாக பிணங்கள் கரை ஒதுங்கின.
முதலில் சத்தமில்லாமல் வந்து விட்டு கடலுக்குள் சென்ற சுனாமி அலையை வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு ஓடிய சின்னஞ்சிறுசுகளின் சப்த நாடியும் சிறிது நேரத்திலேயே அடங்கிப்போனது.இப்படி ஈவு இரக்கமின்றி வயது வித்தியாசமில்லாமல் அத்தனை பேரின் மூச்சுக் காற்றையும் ஒரே நொடியில் நிறுத்தி நிசப்தமாகி விட்டாள், கடல் அன்னை.

தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்தது நாகை மாவட்டம்தான். அங்கு 6 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்தனர். குமரி மாவட்டத்தில் ஆயிரம் பேரை சுனாமி காவு வாங்கியது. சென்னையில் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.9 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் சுனாமியின் சோக சுவடுகள் கடற்கரை கிராமங்களில் இன்னும மாறாத வடுவாகவே உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் இன்று தமிழக கடலோரங்களில் 9–ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
காசி மேட்டில் பாலகங்கா எம்.பி., முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் டி.கே. எஸ். இளங்கோவன் எம்.பி., அஞ்சலி செலுத்தினார்.
மெரினா கடற்கரையில் தமிழக மீனவர் பேரவை சார்பில் அதன் தலைவர் அன்பழகன், நடிகர் கே.ராஜன் ஆகியோர் தலைமையில் ஒரே சீருடையில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் கடலில் பால் ஊற்றியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.அப்பகுதியை சேர்ந்த மீனவ இளைஞர்கள் மணல் சிற்பத்தையும் அமைத்திருந்தனர். இதில் சிறுவர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மனித உரிமை பாதுகாப்பு கழகம் மற்றும், மகளிர் பாதுகாப்பு நல சங்கம் ஆகியவை சார்பிலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மெரீனா கடற்கரையில் மட்டும் இன்று 5 இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெசன்ட் நகர், எண்ணூரிலும், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் அமைச்சர் பச்சைமாலும், நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நினைவு பூங்காவில் அமைச்சர் ஜெயபாலும் அஞ்சலி செலுத்தினர்.

வேளாங்கண்ணியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பொது மக்கள் மலர் தூவினர். 400–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த கடலூரில் அ.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இப்படி இன்று ... தமிழக கடலோர கிராமங்கள் முழுவதிலும் வடிந்தோடிய கண்ணீர் கடல்நீரை மேலும் உப்பாக்கியிருக்கிறது, என்றால் அது மிகையாகாது. மெரினாவில் நடைபெற்ற கண்ணீர் அஞ்சலி ஊர்வல பேனரில் இடம் பெற்றிருந்த வார்த்தைகள் இவை"அலை தாயே ... அலை தாயே ... இனி ஒரு முறை எங்களை அழ வைக்காதே"இது போன்ற வேண்டுதல்கள் பலிக்கவும், சுனாமி போன்று இன்னொரு இயற்கை பேரிடர் ஏற்படாமல் இருக்கவும் எல்லோரும் வேண்டிக்கொள்வோம்.

Tuesday, 24 December 2013

ரெயிலில் முன்பதிவு செய்த டிக்கெட்டை மற்றொருவர் பெயரில் மாற்றி பயணிக்கும் வசதி: தென்னக ரெயில்வே

ரெயிலில் முன்பதிவு செய்து ஒருவர் பெயரில் எடுக்கப்படும் டிக்கெட்டை மற்றொருவர் பெயரில் மாற்றி பயணிக்கும் வசதியை தென்னக ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.
http://www.maalaimalar.com/2013/12/24115557/Ticket-reservations-can-be-mad.html


தென்னக ரெயில்வே நடைமுறைப்படுத்தியுள்ள இந்த புதிய திட்டத்தின் மூலம் ஒருவரது பெயரில் முன்பதிவு செய்து எடுக்கப்படும் ரெயில் டிக்கெட்டை அவரது குடும்பத்தில் உள்ள வேறு ஒருவரது பெயரில் மாற்றி பயணிக்கலாம்.இதற்காக குறிப்பிட்ட ரெயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே ரெயில்வே மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்கவேண்டும்.குடும்ப உறுப்பினர்கள் என்பதற்கு ரேசன் கார்டு போன்ற அடையாள சான்றுகளை கொடுக்க வேண்டும்.

                              திருமணம் போன்ற விழாக்களுக்கு குழுவாக செல்பவர்களின் டிக்கெட்டுகளை மாற்றி கொள்ளலாம்.பணி நிமித்தமாக பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியர்களும் இந்த வசதியை பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் குறிப்பிட்ட அரசு ஊழியர் செல்லமுடியாதபோது வேறொரு ஊழியரின் பெயரில் டிக்கெட்டை மாற்றிக்கொள்ளலாம்.பயணம் செய்ய உள்ள ஊழியர் உயர்அதிகாரி மூலம் இதற்காக விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளலாம்.

                                  இதேபோல் பள்ளி அல்லது கல்லூரி மாணவரின் பெயரில் எடுக்கப்பட்டுள்ள டிக்கெட்டை அந்த கல்வி நிறுவன முதல்வரின் ஒப்புதலோடு வேறொரு மாணவரின் பெயரில் மாற்றிக்கொள்ள முடியும் என தென்னக ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது.

Monday, 23 December 2013

முட்டை, மைதா, ஆயில் விலையேற்றம்: கிறிஸ்துமஸ் கேக் கிலோவுக்கு ரூ.200 உயர்வு

கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டத்தின் போது, உறவினர்கள், நண்பர்களுக்கு ‘கேக்’ கொடுப்பது வழக்கம். ஒருவருக்கொருவர் அன்பு பரிமாற்றத்தின் அடையாளமாக ‘கேக்’ இடம் பெறுகிறது. சென்னையில் பல்வேறு வகையான கேக்கு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளன.


இது தவிர அன்பளிப்பாக வழங்கும் வகையில் அட்டை பெட்டிக்குள் அடைத்தும் விற்கப்படுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த வருடம் கேக் விலை உயர்ந்துள்ளது. கிலோவிற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்துள்ளது. கேக்கிற்கு பயன்படுத்தப்படும் முட்டை, மைதா, எண்ணை ஆகியவற்றின் விலை உயர்வே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
கிலோ ரூ.250, ரூ.300 ஆக இருந்த கேக் வகைகள் இந்த ஆண்டு ரூ.400 முதல் ரூ.650 வரை விற்கிறது.

இது குறித்து புரசைவாக்கத்தில் உள்ள ‘‘ஒயிட் பீல்டு’’ கேக் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் வி.எம்.மொய்தீன் கூறியதாவது:–
இந்த கடை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 50 வருடமாக சிபத்துல்லா என்பவர் நடத்தி வருகிறார். கேக் விற்பனையில் மக்களின் நன்மதிப்பை பெற்ற பழமையான கடை இது.
இந்த ஆண்டு கேக் விலை சற்று உயர்ந்துள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்ந்ததால் தயாரிப்பு செலவு அதிகமாகி உள்ளது. ஆனாலும் எங்கள் கடையில் தரமான கேக் வகைகள் மற்ற கடைகளை விட குறைவாகவே விற்கிறோம்.

வெண்ணிலா கேக் கிலோ ரூ.250, பிஸ்தா, சாக்லேட், பைனாப்பிள், ஸ்ட்ராபெர்ரி மற்றும் நட் வகை கேக்குகள் கிலோ ரூ.300 வால்நட்கேக், பிளம்கேக் மற்றும் டீ கேக் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேன் கேக் ஒன்று ரூ.15க்கும், பிளம் கேக் ஒன்று ரூ.15–க்கும் கிடைக்கிறது.
புல்சாக்லேட் கேக் கிலோ ரூ.350 விற்கப்படுகிறது. ஆர்டர்களும் ஏற்றுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, 20 December 2013

ஆதர்ஷ் ஊழல் குறித்த விசாரணை அறிக்கையை நிராகரித்தது மகாராஷ்டிர சட்டமன்றம்

மகாராஷ்டி மாநிலத்தில் ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வர் அசோக் சவான் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த அரசியல் தலைவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
http://www.maalaimalar.com/2013/12/20150906/Maharashtra-cabinet-rejects-re.html


இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து அசோக் சவான் விலகினார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில், சட்டவிரோதமாக குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்ததில் அசோக் சவான் மற்றும் 12 பேர் மீது குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் அந்த நிலம் மத்திய அரசுக்கு சொந்தமானது, பாதுகாப்புத்துறைக்கு சொந்தமல்ல என்று மாநில அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில், ஆதர்ஷ் ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை மகாராஷ்டிர சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை அரசு நிராகரித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். முதல்வர் சவான் உள்ளிட்ட தனது தலைவர்களை பாதுகாக்க ஆளும் காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பா.ஜனதா உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.

சட்டமன்றத்தில் தாக்க்ல செய்யப்பட்ட அறிக்கையில் சவானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வலுவாக இருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் சவானிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று சமீபத்தில் சி.பி.ஐ. கேட்டபோது, அதற்கு கவர்னர் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Thursday, 19 December 2013

1947–ம் வருடத்தைப் போல 2014–ம் வருடம்: 67 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மாதிரி காலண்டர் அரசியல் மாற்றம் ஏற்படுமா?

புதிய வருடம் பிறக்கிறது என்றாலே அது எப்படி இருக்கும்? என்ற ஆருடமும், ஆர்வமும் அனைவரையும் தொற்றிக் கொள்வது உண்டு.

அந்த வகையில் வரும் 2014–ம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை, இப்போதே பலர் கணிக்க தொடங்கி விட்டனர். அதுவும் ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த கனிப்பையும் விடாமல் படித்து பரப்பரப்புக்குள்ளாவார்கள்.அந்த வகையில் பிறக்க இருக்கும் 2014–ம் ஆண்டு காலண்டர் 1947–ம் ஆண்டு காலண்டர் போல் உள்ளது போலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 67 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு அதிசயம் நிகழ்வது ஜோதிடர்களை சுறுசுறுப்பாக்கி உள்ளது.

http://www.maalaimalar.com/2013/12/19133423/2014-year-calender-same-1947-y.html


புதன்கிழமை பிறந்த 1947–ம் ஆண்டை போலவே 2014–ம் ஆண்டும் புதன்கிழமை பிறக்கிறது. அதாவது இந்த இரண்டு ஆண்டுகளிலும் ஜனவரி 1–ந்தேதி புதன் கிழமை வருகிறது. அதே போல் மற்ற தேதிகளும், கிழமைகளும் ஒரே மாதிரி உள்ளது.1947–ம் ஆண்டு காலண்டரை எடுத்து பார்த்தால் அதன் ‘ஜெராக்ஸ்’ போல 2014–ம் ஆண்டு காலண்டர் இருக்கும்.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது 1947–ம் ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததே! அதேபோன்ற மாற்றத்தை 2014–ம் ஆண்டு இந்தியா சந்திக்கும் என்று பலர் கணித்து கூறு கிறார்கள்.

அதற்கு ஏற்றாற்போல 2014–ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. தேர்தலில் இந்த மாற்றத்தை காணலாம் என்கிறார்கள் அவர்கள்.
மாற்றம் வருவது இருக்கட்டும் முதலில் புத்தாண்டு அமைதியாக பிறக்கிறதா? என பார்ப்போம்.

Wednesday, 18 December 2013

லோக்பால் மசோதா நிறைவேறியதால் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார் ஹசாரே

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நேற்று 5 மணி நேர விவாதத்திற்கு பிறகு மாநிலங்களவையில் நிறைவேறியது. சமாஜ்வாடி கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்தும் இம்மசோதாவுக்கு ஆதரவு அளித்தன. இதையடுத்து திருத்தப்பட்ட லோக்பால் மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று மதியம் 12 மணிக்கு பிறகு இதன் மீதான விவாதம் தொடங்கியது. இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ், பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பேசினர்.
http://www.maalaimalar.com/2013/12/18151925/Hazare-ended-his-hunger-strike.html


அதன் பின்னர் நடைபெற்ற குரல் ஓட்டெடுப்பில் மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானவுடன், ராலேகான் சித்தியில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த அன்னா ஹசாரே மகிழ்ச்சி அடைந்தார். தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது, விரைவில் இது சட்டமாக வெளியிடப்படும் என நம்புவதாகவும், இதில் திருத்தங்கள் மேற்கொண்ட தேர்வுக்குழுவினரை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்மசோதாவை கொண்டு 100 சதவிகித ஊழலை கட்டுப்படுத்த முடியாது என்றும், ஆனால் 50 சதவிகிதமாவது கட்டுப்படுத்த வாய்ப்புள்ளதாக தாம் ஏற்கனவே கூறியுள்ளதாக ஹசாரே மேலும் தெரிவித்தார்.

பின்னர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். பள்ளி குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகிய ஹசாரே, 9 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

Tuesday, 17 December 2013

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது: லல்லு பிரசாத் யாதவ் கருத்து

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுதலையான ராஷ்டிரிய ஜனதா தளதலைவர் லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் ராகுல் காந்தியை காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டு இருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு லல்லு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது என்பது காங்கிரசின் முடிவு. நான் தற்போது காங்கிரசுடன் தான் இருக்கிறேன். ஆனால் முதல்-மந்திரியையோ, பிரதமரையோ தேர்தலுக்கு பின்பு தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதைக்கு ராகுல்காந்தி இளைய தலைவர். மற்றதை அப்புறம் முடிவு செய்யுங்கள்.


லல்லு பிரசாத் மேலும் கூறியதாவது:-

பீகாரில் நிதீஷ்குமார் ஆட்சி இனியும் நீடிக்க கூடாது என்றும், அவரது ஆட்சியை அகற்றவும் மக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்காக நாங்கள் கடுமையாக பாடுபட்டு வருகிறோம். மத சார்பற்ற கட்சிகள் ஒரே அணியில் சேர வேண்டும். யாராலும் தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியாது.

2002 குஜராத் கலவரம் பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அதர்மம் என்று நரேந்திர மோடியை கண்டித்துள்ளார். அப்போது நரேந்திர மோடியை அத்வானிதான் காப்பற்றினார். நிதீஷ்குமாரும் அவர் பக்கம்தான் இருந்தார். அத்வானியின் ரத யாத்திரையை நான்தான் பீகாரில் தடுத்து நிறுத்தினேன். மோடியின் மத யாத்திரையையும் தடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Monday, 16 December 2013

ஜனாதிபதி பிரணாப் சென்னை வருகை: வர்த்தக-பொருளாதார கல்வி மையத்தை திறந்து வைக்கிறார்

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் டிசம்பர் 20ம் தேதி சென்னை வருகிறார். அப்போது, லயோலா கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள வர்த்தகம் மற்றும் பொருளாதார கல்வி மைய புதிய கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.


ரூபாய் 11 கோடி செலவில், 4 மாடிகளை உள்ளடக்கிய இவ்வர்த்தகம் மற்றும் பொருளாதார கல்வி மைய கட்டிடம், "46 ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்பறைகளை கொண்டுள்ளதாக, அக்கல்லூரி முதல்வர் ஜோசப் அந்தோணி சாமி தெரிவித்துள்ளார்.

1 லட்சம் சதுர அடிகள் பரப்பளவு கொண்ட இக்கட்டிடம், இக்கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவரின் முன் முயற்சியினால் கட்டப்பட்டுள்ளதாகவும், 16 "ஸ்மார்ட் கிளாஸ்" வகுப்புகள் ஒவ்வொன்றையும் தலா ரூ.20 லட்சம் செலவில் பலரின் நிதியுதவியால் அமைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லயோலாவின் "லிபா"வே இப்படிப்பட்ட கல்வியை வழங்கும்போது, எதற்கு புதிதாக ஒரு கல்வி மையம் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “லிபாவிற்கு சென்னை பல்கலைக்கழகத்துடன் எவ்வித தொடர்பும் இல்லை, அது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் நேரடி பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆனால் புதிய கல்வி மையம் சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.

Friday, 13 December 2013

ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே பதவியேற்றார்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 162 தொகுதிகளை பா.ஜனதா கட்சி கைப்பற்றியது. 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 96 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தற்போது 21 இடங்களை மட்டுமே தக்கவைத்தது.
http://www.maalaimalar.com/StoryListing/StoryListing.aspx?NavId=18&NavsId=1


ஆட்சியமைக்க போதுமான தனிப்பெரும்பான்மை பெற்றதையடுத்து, பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிந்தியா அரச குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா முதலமைச்சர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து வசுந்தரா ராஜே சிந்தியா ஆளுநர் மார்கரேட் ஆல்வாவை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.

ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. சட்டசபையில் நடைபெற்ற விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மார்கரெட் ஆல்வா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் வசுந்தரா இரண்டாவது முறையாக ராஜஸ்தானின் முதல்வர் ஆக பொறுப்பேற்றிருக்கிறார். இன்று முதல்வர் மட்டும் பதவியேற்றார்.

விழாவில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி சட்டசபை வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்கள் தூரத்தில் இருந்து விழா நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பதவியேற்றதும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு வசுந்தரா சென்றார்.

இதற்கிடையே, சூரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

Thursday, 12 December 2013

டெல்லியில் ஆட்சியமைக்கப்போவது யார்?: பேச்சு வார்த்தைக்கு வருமாறு பா.ஜ.க.வுக்கு கவர்னர் அழைப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளிவந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்று குழப்பம் நிலவி வந்தது.
http://www.maalaimalar.com/2013/12/12100547/who-will-rule-in-Delhi-BJP-to.html


தேர்தலில் அதிக இடங்களை பிடித்த கட்சி என்ற முறையில் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது. மறுபுறம் பா.ஜ.கவை விட 4 இடங்கள் குறைவாக பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. பா.ஜ.க.வுக்கு ஆதரவு தர சுயேட்சை எம்.எல்.ஏ.வும், ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவளிக்க ஐக்கிய ஜனதா தள கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஒரே எம்.எல்.ஏ.வான ஷோயப் இக்பாலும் முடிவு செய்தனர். ஆனால் இரு கட்சிகளும் ஆட்சியமைக்க மறுத்துவிட்டன.

இந்நிலையில் சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்த பின்பு அம்மாநில ஆளுனர் நஜீம் ஜங், டெல்லியில் ஆட்சியமைப்பது குறித்து இன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு பா.ஜ.கவின் முதலமைச்சர் வேட்பாளரான ஹர்ஷ்வர்த்தனை அழைத்துள்ளார். முன்னதாக குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆளுநரை நேற்று அழைத்து டெல்லி நிலவரம் குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேச்சுவார்த்தைக்குபின் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் குழப்பம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday, 11 December 2013

அடுத்த ஆண்டு நவம்பர் 11–ந் தேதி வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் விண்கலம்: விஞ்ஞானிகள் தகவல்

விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ’ரொசேட்டா’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது கடந்த 2004–ம் ஆண்டு மார்ச் மாதம் சூரிய மண்டலத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
இது 3 தடவை பூமியின் புவி வட்ட பாதையிலும், செவ்வாய் கிரகத்தையும் சுற்றி சென்றுள்ளது. பல லட்சம் கி.மீட்டர் தூரம் பயணம் செய்துள்ள இந்த விண்கலம் 2 விண்கற்களை தாண்டியும் பயணம் செய்துள்ளது.

http://www.maalaimalar.com/2013/12/11124455/The-next-year-on-November-11-t.html

இந்த நிலையில் இது 67–பி களியுமோல் ஜெராசி மென்கோ என்ற வால் நட்சத்திரத்தையும் கடந்து சென்றது. அதை பார்த்த விஞ்ஞானிகள் அந்த மிகப்பெரிய வால் நட்சத்திரத்தில் ’ரொசேட்டா’ விண்கலத்தை தரை இறங்கும் என எதிர்பார்த்தனர்.

இந்த நிலையில், ’ரொசேட்டா’ விண்கலம் அடுத்த ஆண்டு அதாவது வருகிற 2014–ம் ஆண்டில் நவம்பர் 11–ந் தேதி வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என துல்லியமாக கணக்கிட்டு அறவித்துள்ளனர்.

அது குறித்து ரொசெட்டா விண்கல திட்ட விஞ்ஞானி மட்டெல்வர்கூறியதாவது:– இது போன்று அதற்கு முன் நடைபெற்றதில்லை. அதுபோன்று நடப்பதற்கு பல தடைகள் ஏற்படும். இதில் அதையெல்லாம் கடந்து ’ரொசேட்டா’ விண்கலம் குறிப்பிட்ட நாளில் அந்த வால் நட்சத்திரத்தில் தரை இறங்கும் என தெரிவித்துள்ளார்.

Tuesday, 10 December 2013

டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றி எதிரொலி: லோக்பால் மசோதாவை நிறைவேற்ற காங்கிரஸ் முடிவு

ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கிடைத்திருக்கும் வெற்றியின் விளைவாக காங்கிரஸ் கட்சி ஜன் லோக்பால் மசோதாவை, நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற முடியு செய்துள்ளது.
http://www.maalaimalar.com/StoryListing/StoryListing.aspx?NavId=18&NavsId=1
 
 
டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 40 சதவிகித தொகுதிகளை கைப்பற்ற முக்கிய காரணம், மக்கள் ஊழல்வாதிகளை பார்த்து விரக்தி அடைந்து விட்டதும், ஊழல்வாதிகளை வெறுப்பதும்தான் என காங்கிரஸ் கருதுகிறது.
 
காந்தீயவாதி அன்னா ஹசாரே லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வலியுறுத்தி இன்று தனது உண்ணாவிரத்தை துவக்கி உள்ள நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி, நடைபெற்றுக் கொண்டிருக்கும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே இம்மசோதா நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
 
ஹசாரேவுடன் இணைந்து லோக்பால் மசோதா தொடர்பான போராட்டங்களில் பங்கேற்ற 44 வயதான அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சியை துவங்க உள்ளதாக குறிப்பிட்டபோது ஹசாரேவுடனான தொடர்பில் விரிசல் ஏற்பட்டது. எந்த அரசியல் கட்சியுடனும் சேரும் உத்தேசம் தனக்கில்லை என்று ஹசாரே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Monday, 9 December 2013

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சீமாந்திராவின் 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனர்

ஆந்திராவைப் பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு ஆளும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. புதிய மாநிலம் உருவானால், பல்வேறு எம்.பி.க்களுடன் கட்சியை விட்டு வெளியேற முதல்வர் கிரண்குமார் ரெட்டி திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. தெலுங்கானா விவகாரத்தால் பாராளுமன்றத்தில் இன்று கடும் அமளி ஏற்பட்டது.
http://www.maalaimalar.com/2013/12/09155804/Telangana-Seemandhara-Cong-MPs.html


இந்நிலையில், தெலுங்கானாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, சீமாந்திரா பகுதியில் உள்ள 6 காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தனர்.

இதேபோல், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது போராட்டம் மக்களை சென்றடைய புதிய திட்டத்தை வகுத்துள்ளார். அதன்படி, மாணவர்கள் மற்றும் விவசாயிகளை திரட்டி ஆர்ப்பாட்ட பேரணிகள் நடத்த உள்ளார். மக்களிடையே இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுக்கூட்டங்களும் நடத்தப்படும்.

Thursday, 5 December 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஏற்காடு தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க. வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர். இதற்காக தொகுதி முழுவதும் 120 இடங்களில் 290 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

http://www.maalaimalar.com/2013/12/05111748/Yercaud-election-electronic-vo.html


குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலை முதலே திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.உள்ளூர் போலீசார், சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மொத்தம் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஏற்காடு தொகுதி வரலாற்றிலேயே இந்த வாக்கு சதவீதம் தான் அதிகம்.வாக்குப்பதிவு முடிந்ததும் அதிகாரிகள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு சீல் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் ஓட்டு எண்ணும் இடமான அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வந்தனர். நள்ளிரவு வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது.

இங்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகளை பாதுகாப்பு பணியில் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையில் வாக்கு சாவடிகளுக்கு வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர எண்ணும், கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திர எண்ணும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்று சோதனையிட்டு, அதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.முதலாவதாக நேற்று இரவு 8.10 மணிக்கு ஏற்காடு குண்டூர் வாக்குச்சாவடி மையத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டது. அதை அதிகாரிகள் சோதனையிட்டு சீல் வைத்து அறையில் பாதுகாப்பாக வைத்தனர். இதையடுத்து அடுத்தடுத்து தொகுதியின் அனைத்து இடங்களிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஏற்காடு மற்றும் கருமந்துறை உள்பட பல மலைக்கிராமங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விடிய விடிய கொண்டு வரப்பட்டது. இதுதவிர சில கிராமங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வர சற்று தாமதம் ஆனது.இன்று அதிகாலை 5 மணி வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டது. பின்னர் இந்த அறைக்கு அதிகாலை 5.30 மணி அளவில் ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சபாபதி, தாசில்தார்கள் தங்கராஜ், பாலசுப்பிரணியம், சுரேஷ், சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் மூன்று முறை சீல் வைத்தனர்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருக்கும் அறையின் வெளியே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணிநேரமும் கம்ப்யூட்டர் மூலம் தேர்தல் அதிகாரிகள், போலீசார் கண்காணித்து கொண்டு இருப்பார்கள். மேலும் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி நுழைவு வாயில், கல்லூரி வளாகம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருக்கும் அறை என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 8–ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

Wednesday, 4 December 2013

செவ்வாயை நோக்கிய பயணம்: மங்கள்யான் விண்கலம் புவிஈர்ப்பு மண்டலத்தை தாண்டியது

செவ்வாய்கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா மங்கள்யான் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி உள்ளது. 450 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து கடந்த மாதம் 5-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

மங்கள்யானின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு கடைசியாக 2 லட்சம் கி.மீ. உயரத்துக்கு பல்வேறு சிக்கல்களுக்குப்பின் உயர்த்தப்பட்டது. சுற்று வட்டப்பாதையை உயர்த்தும்போது மங்கள்யானில் உள்ள சிறிய ராக்கெட்டுகள் இயங்கவில்லை என்றாலும் அதில் உள்ள எரிபொருள்கள் வீணாகாததால் ராக்கெட்டுகளை மீண்டும் இயக்கும் பணி நடந்தது. இதில் இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றி பெற்றனர்.
http://www.maalaimalar.com/2013/12/04131020/Mangalyan-reach-sphere-of-infl.html


மங்கள்யான் நேற்று முன்தினம் 5,36,000 கி.மீ தூரத்தை கடந்து சந்திரனின் சுற்றுப்பாதையை தாண்டிய நிலையில் இன்று அதிகாலை 1.14 மணியளவில் 9,25,000 கி.மீ தூரத்தை கடந்து புவிஈர்ப்பு மண்டலத்தை தாண்டி சென்றதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

விண்கலம் சுற்றுப்பாதையில் இருந்து விலகினால் டிசம்பர் 11, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 14 ஆகிய நாட்களில் சரிசெய்து செப்டம்பர் 2014-ல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடைய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாராய்ச்சி வெற்றிகரமாக முடியும் போது ஏற்கனவே செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக விண்கலம் அனுப்பி வெற்றி கண்ட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இடம்பெறும் வாய்ப்புள்ளது.

Tuesday, 3 December 2013

குமரியில் புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வங்ககடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி இருப்பதால் தென்மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நாகர்கோவில், கொட்டாரம், மயிலாடி, ஆரல்வாய்மொழி, சுருளோடு, முள்ளாங்கினாவிளை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

http://www.maalaimalar.com/2013/12/03123549/Kumari-storm-warning-fishermen.html

முள்ளாங்கினாவிளையில் அதிகபட்சமாக 15 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழையோர பகுதியான பாலமோரில் பலத்த மழை பெய்ததால் பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது.பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 27.20 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 196 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.80 அடியாகவும், சிற்றார்–1 அணை நீர்மட்டம் 12.79 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 12.89 அடியாகவும், மாம்பழத் துறையாறு அணை நீர்மட்டம் 51.02 அடியாகவும் உள்ளது. நாகர்கோவிலுக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர் மட்டம் 21 அடியாக உயர்ந்து உள்ளது. மொத்தம் 25 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவை.

மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டாரில் வருமாறு:–
பேச்சிப்பாறை, 12.2, பெருஞ்சாணி 2.8, சிற்றார்1–9.8, சிற்றார்2 –6.8, ஆனைக்கிடங்கு–2, குளச்சல் 4.6, முள்ளாங்கினாவிளை 15, புத்தர்அணை 2.6, நாகர்கோவில் 5.1, பூதப்பாண்டி, 8, கன்னிமார் 8.3, ஆரல்வாய்மொழி 7, பாலமோர் 8.2, மயிலாடி 1.5.

வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த தாழ்வுநிலை காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மீனவ துறை அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் ‘குமரி மாவட்டத்தில் இன்று கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம்’ என கூறி உள்ளனர்.மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Monday, 2 December 2013

தெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது: மத்திய அரசு ஐகோர்ட்டில் விளக்கம்

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கனகசபை பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் மற்றும் அறிவியல் விஞ்ஞானி சி.என்.ராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட உள்ளதாக பிரதமர் மன் மோகன்சிங் அறிவிப்பு வெளியிட்டார்.
http://www.maalaimalar.com/2013/12/02132931/bharat-ratna-award-to-tendulka.html

பொதுவாக பாரத ரத்னா விருது கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வழங்கப்படும்.விளையாட்டு வீரருக்கு இதுபோன்ற விருது வழங்கப்பட்டது இல்லை. தெண்டுல்கருக்கு இந்த விருதை அறிவித்து இருப்பது விதிமுறை மீறலாகும். எனவே இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால், நீதிபதி ரவிச்சந்திர பாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் பி.வில்சன் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–இந்திய ஜனாதிபதி 16–11–2011 அன்று வெளியிட்ட அறிக்கையில், கலை, இலக்கியம், அறிவியல் மட்டுமல்லாமல் பிற துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கலாம் என்று கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சச்சின் தெண்டுல்கர் பாரத ரத்னா விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.பின்னர் இந்த வழக்கை நாளைக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.