Friday, 13 December 2013

ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே பதவியேற்றார்

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா தனி மெஜாரிட்டி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இதில் 162 தொகுதிகளை பா.ஜனதா கட்சி கைப்பற்றியது. 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 96 இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி தற்போது 21 இடங்களை மட்டுமே தக்கவைத்தது.
http://www.maalaimalar.com/StoryListing/StoryListing.aspx?NavId=18&NavsId=1


ஆட்சியமைக்க போதுமான தனிப்பெரும்பான்மை பெற்றதையடுத்து, பா.ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், சிந்தியா அரச குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா முதலமைச்சர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து வசுந்தரா ராஜே சிந்தியா ஆளுநர் மார்கரேட் ஆல்வாவை சந்தித்து ஆட்சி அமைக்க அழைக்குமாறு உரிமை கோரினார்.

ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. சட்டசபையில் நடைபெற்ற விழாவில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் மார்கரெட் ஆல்வா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம் வசுந்தரா இரண்டாவது முறையாக ராஜஸ்தானின் முதல்வர் ஆக பொறுப்பேற்றிருக்கிறார். இன்று முதல்வர் மட்டும் பதவியேற்றார்.

விழாவில் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி சட்டசபை வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. விழாவில் பங்கேற்கும் பார்வையாளர்கள் தூரத்தில் இருந்து விழா நிகழ்ச்சியை பார்ப்பதற்கு வசதியாக பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. பதவியேற்றதும் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கு வசுந்தரா சென்றார்.

இதற்கிடையே, சூரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் இறந்ததையடுத்து அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment