Thursday, 26 December 2013

இன்று 9–ம் ஆண்டு நினைவு நாள்: கடற்கரை கிராமங்களில் சுனாமி சோக சுவடுகள்

9 ஆண்டுகளுக்கு முன்னர் (2004– டிசம்பர் 26) இதே நாளில் ஆழ்கடலில் இருந்து எழும்பிய அலை அரக்கன் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மனித உயிர்களை ருசி பார்த்தான். 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.
அமைதியே உருவான கடல் அன்னையின் இன்னொரு கோர முகத்தை அப்போது தான் உலகம் கண்டது. சென்னையில் இருந்து குமரி வரை கடலோர கிராமங்களில் கோரத்தாண்டவம் ஆடிய சுனாமி பேரலைகள் ஆயிரக் கணக்கானோரை கடலுக்குள் அடித்துச்சென்றது. இவர்களில் யாரும் உயிர் தப்பவில்லை. அன்றைய தினம் கடற்கரை கிராமங்கள் முழுவதும் மரண ஓலம் ஒலித்தது. தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது.


நாகப்பட்டினம், கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி என அனைத்து மீனவ கிராமங்களிலும் கொத்து கொத்தாக பிணங்கள் கரை ஒதுங்கின.
முதலில் சத்தமில்லாமல் வந்து விட்டு கடலுக்குள் சென்ற சுனாமி அலையை வேடிக்கை பார்க்க கடற்கரைக்கு ஓடிய சின்னஞ்சிறுசுகளின் சப்த நாடியும் சிறிது நேரத்திலேயே அடங்கிப்போனது.இப்படி ஈவு இரக்கமின்றி வயது வித்தியாசமில்லாமல் அத்தனை பேரின் மூச்சுக் காற்றையும் ஒரே நொடியில் நிறுத்தி நிசப்தமாகி விட்டாள், கடல் அன்னை.

தமிழகத்தில் சுனாமி தாக்குதலில் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்தது நாகை மாவட்டம்தான். அங்கு 6 ஆயிரத்து 65 பேர் உயிரிழந்தனர். குமரி மாவட்டத்தில் ஆயிரம் பேரை சுனாமி காவு வாங்கியது. சென்னையில் 300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.9 ஆண்டுகளாகி விட்ட நிலையிலும் சுனாமியின் சோக சுவடுகள் கடற்கரை கிராமங்களில் இன்னும மாறாத வடுவாகவே உள்ளது. இதனை உணர்த்தும் வகையில் இன்று தமிழக கடலோரங்களில் 9–ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.
காசி மேட்டில் பாலகங்கா எம்.பி., முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் எம்.எல்.ஏ., தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் டி.கே. எஸ். இளங்கோவன் எம்.பி., அஞ்சலி செலுத்தினார்.
மெரினா கடற்கரையில் தமிழக மீனவர் பேரவை சார்பில் அதன் தலைவர் அன்பழகன், நடிகர் கே.ராஜன் ஆகியோர் தலைமையில் ஒரே சீருடையில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள் கடலில் பால் ஊற்றியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர்.அப்பகுதியை சேர்ந்த மீனவ இளைஞர்கள் மணல் சிற்பத்தையும் அமைத்திருந்தனர். இதில் சிறுவர்கள் மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மனித உரிமை பாதுகாப்பு கழகம் மற்றும், மகளிர் பாதுகாப்பு நல சங்கம் ஆகியவை சார்பிலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. மெரீனா கடற்கரையில் மட்டும் இன்று 5 இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பெசன்ட் நகர், எண்ணூரிலும், ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.கன்னியாகுமரியில் உள்ள சுனாமி நினைவு ஸ்தூபியில் அமைச்சர் பச்சைமாலும், நாகை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நினைவு பூங்காவில் அமைச்சர் ஜெயபாலும் அஞ்சலி செலுத்தினர்.

வேளாங்கண்ணியில் உள்ள நினைவு ஸ்தூபியில் பொது மக்கள் மலர் தூவினர். 400–க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த கடலூரில் அ.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இப்படி இன்று ... தமிழக கடலோர கிராமங்கள் முழுவதிலும் வடிந்தோடிய கண்ணீர் கடல்நீரை மேலும் உப்பாக்கியிருக்கிறது, என்றால் அது மிகையாகாது. மெரினாவில் நடைபெற்ற கண்ணீர் அஞ்சலி ஊர்வல பேனரில் இடம் பெற்றிருந்த வார்த்தைகள் இவை"அலை தாயே ... அலை தாயே ... இனி ஒரு முறை எங்களை அழ வைக்காதே"இது போன்ற வேண்டுதல்கள் பலிக்கவும், சுனாமி போன்று இன்னொரு இயற்கை பேரிடர் ஏற்படாமல் இருக்கவும் எல்லோரும் வேண்டிக்கொள்வோம்.

No comments:

Post a Comment