Friday, 27 December 2013

அமெரிக்க விசா கேட்டு மோடி விண்ணப்பிக்க கூடாது: அருண் ஜெட்லி கருத்து


குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் எம்.பி.எசான் ஜாப்ரி உட்பட 68 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி உள்ளிட்ட 58 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கை விசாரித்த சிறப்பு விசாரணைக்குழு, போதிய ஆதாரம் இல்லாததால், அனைவரும் குற்றமற்றவர்கள் என்று கூறி வழக்கில் இருந்து விடுவித்தது.

இதனை எதிர்த்து எசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி அகமதாபாத் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். அதில் மோடி மீது குற்றம் சாட்டியிருந்த அவர், மீண்டும் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, நரேந்திர மோடி குற்றமற்றவர் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், ஜாகியா ஜாப்ரியின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இதனால், நரேந்திர மோடிக்கு இருந்த நெருக்கடி நீங்கியது.

இந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அமெரிக்க அரசாங்கம், மோடிக்கு விசா வழங்க மறுத்து வந்தது. இப்போது மோடி விடுவிக்கப்பட்ட தகவல் வெளியானவுடன், அவர் அமெரிக்கா செல்லும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து இன்று கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி, மோடி அமெரிக்க விசா கேட்டு விண்ணப்பிப்பதில் தனக்கு தனிப்பட்ட முறையில் உடன்பாடில்லை என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்க முயற்சித்தது தவறு என்றும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்காக தொடர்ந்து விசாரணை மேல் விசாரணை நடத்தப்பட்டது தவறு என்றும், அந்த விசாரணையைக் கருத்தில் கொண்டு மோடி குற்றமுள்ளவர் என அமெரிக்கா தீர்மானித்தது தவறு” என்றார்.

No comments:

Post a Comment