Thursday, 5 December 2013

ஏற்காடு இடைத்தேர்தல்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

ஏற்காடு தொகுதியில் ஓட்டுப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க. வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிட்டனர். இதற்காக தொகுதி முழுவதும் 120 இடங்களில் 290 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

http://www.maalaimalar.com/2013/12/05111748/Yercaud-election-electronic-vo.html


குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலை முதலே திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை செய்தனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.உள்ளூர் போலீசார், சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக அமைதியான முறையில் நடந்து முடிந்தது. மொத்தம் 89.24 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது. ஏற்காடு தொகுதி வரலாற்றிலேயே இந்த வாக்கு சதவீதம் தான் அதிகம்.வாக்குப்பதிவு முடிந்ததும் அதிகாரிகள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு சீல் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் ஓட்டு எண்ணும் இடமான அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு வந்தனர். நள்ளிரவு வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டது.

இங்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு பெட்டிகளை பாதுகாப்பு பணியில் இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சோதனையிட்டனர். இந்த சோதனையில் வாக்கு சாவடிகளுக்கு வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திர எண்ணும், கல்லூரிக்கு கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு எந்திர எண்ணும் ஒரே மாதிரியாக உள்ளதா? என்று சோதனையிட்டு, அதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.முதலாவதாக நேற்று இரவு 8.10 மணிக்கு ஏற்காடு குண்டூர் வாக்குச்சாவடி மையத்தில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டது. அதை அதிகாரிகள் சோதனையிட்டு சீல் வைத்து அறையில் பாதுகாப்பாக வைத்தனர். இதையடுத்து அடுத்தடுத்து தொகுதியின் அனைத்து இடங்களிலும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

ஏற்காடு மற்றும் கருமந்துறை உள்பட பல மலைக்கிராமங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் விடிய விடிய கொண்டு வரப்பட்டது. இதுதவிர சில கிராமங்களில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வர சற்று தாமதம் ஆனது.இன்று அதிகாலை 5 மணி வரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வந்து வைக்கப்பட்டது. பின்னர் இந்த அறைக்கு அதிகாலை 5.30 மணி அளவில் ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சபாபதி, தாசில்தார்கள் தங்கராஜ், பாலசுப்பிரணியம், சுரேஷ், சந்திரசேகரன் மற்றும் அதிகாரிகள் மூன்று முறை சீல் வைத்தனர்.
மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருக்கும் அறையின் வெளியே கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணிநேரமும் கம்ப்யூட்டர் மூலம் தேர்தல் அதிகாரிகள், போலீசார் கண்காணித்து கொண்டு இருப்பார்கள். மேலும் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி நுழைவு வாயில், கல்லூரி வளாகம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு இருக்கும் அறை என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 8–ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment