Tuesday, 17 December 2013

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கூடாது: லல்லு பிரசாத் யாதவ் கருத்து

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுதலையான ராஷ்டிரிய ஜனதா தளதலைவர் லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம் ராகுல் காந்தியை காங்கிரசின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டமிட்டு இருப்பது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு லல்லு பிரசாத் யாதவ் கூறியதாவது:-

பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வது என்பது காங்கிரசின் முடிவு. நான் தற்போது காங்கிரசுடன் தான் இருக்கிறேன். ஆனால் முதல்-மந்திரியையோ, பிரதமரையோ தேர்தலுக்கு பின்பு தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதைக்கு ராகுல்காந்தி இளைய தலைவர். மற்றதை அப்புறம் முடிவு செய்யுங்கள்.


லல்லு பிரசாத் மேலும் கூறியதாவது:-

பீகாரில் நிதீஷ்குமார் ஆட்சி இனியும் நீடிக்க கூடாது என்றும், அவரது ஆட்சியை அகற்றவும் மக்கள் தயாராகி வருகிறார்கள். இதற்காக நாங்கள் கடுமையாக பாடுபட்டு வருகிறோம். மத சார்பற்ற கட்சிகள் ஒரே அணியில் சேர வேண்டும். யாராலும் தனியாக நின்று தேர்தலில் ஜெயிக்க முடியாது.

2002 குஜராத் கலவரம் பற்றி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அதர்மம் என்று நரேந்திர மோடியை கண்டித்துள்ளார். அப்போது நரேந்திர மோடியை அத்வானிதான் காப்பற்றினார். நிதீஷ்குமாரும் அவர் பக்கம்தான் இருந்தார். அத்வானியின் ரத யாத்திரையை நான்தான் பீகாரில் தடுத்து நிறுத்தினேன். மோடியின் மத யாத்திரையையும் தடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment